Saturday, June 25, 2016

ஃபேஸ்புக்கில் யோசிச்சேன்...27

//செய்தி-1:
காமராஜர் ஆட்சியை விட சிறந்த ஆட்சி அம்மா ஆட்சி - நடிகர் ஆனந்தராஜ் பேச்சு.
செய்தி-2:
நடிகர் ஆனந்த ராஜ் இறந்ததாக வதந்தி. அவர் மறுப்பு!
//
முதல் செய்தியை படிச்ச எவனோ தான் காண்டாகி, ரெண்டாவது வதந்தியைப் பரப்பிட்டானோ?
-----------------------
2013-ல் நான் எழுதியது இது:
// தமிழ் சினிமாவில் வந்த நல்ல த்ரில்லர்களில் ஒன்று 555. ஏற்கனவே பூ போன்ற தரமான படங்களைக் கொடுத்து, நம் மனதில் இடம்பிடித்த இயக்குநர் சசியின் இயக்கத்தில் வந்த படம் இது. நம் எதிர்பார்ப்பை ஏமாற்றாத வகையில் திரைக்கதையில் கலக்கியிருந்தார்.
மற்ற இயக்குநர்கள் அளவிற்கு தடால் புடால் என்று பேசி, மீடியா வெளிச்சத்திலேயே வலம் வரும் நபரல்ல சசி. சில இயக்குநர்கள் கட்டி எழுப்பியிருக்கும் பிம்பத்தைப் பார்த்தால், அவர்களது குப்பைப் படத்தைக்கூட குறை சொல்ல பயமாயிருக்கிறது. அறிவுக்கொழுந்துகள் பாய்ந்து வந்து பிராண்டுகிறார்கள். ஆனால் தமிழில் உள்ள நல்ல இயக்குநர்களில் ஒருவரான சசியைக் காப்பாற்ற இங்கே ஆளில்லை. ‘தமிழன் ஒரு மடையன்..இங்கே எவனுக்கும் படம் பார்க்கத் தெரியாது..என்னை ஜப்பான்ல கூப்ட்டாங்கோ’ ரேஞ்சில் அள்ளி விட்டால்தான் இங்கே பிழைக்க முடியும்போல் உள்ளது.
சசி எடுத்த ஐந்து படங்களுமே வெவ்வேறு ஜெனர்களைச் சேர்ந்தவை. ஆனால் அத்தனை படங்களையும் மனிதர் பெர்ஃபெக்ட்டாக கொடுத்திருப்பார். அவரது இந்த நல்ல படமும் பெரிய வெற்றியை அடையமுடியாமல் போனது, தமிழ் சினிமாவிற்குத் தான் இழப்பு.//
இன்றைக்கு சசியின் ‘பிச்சைக்காரன்’ படத்திற்கு எல்லாப் பக்கங்களில் இருந்தும் பாராட்டுமழை பொழிவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
பிச்சைக்காரன் - டோண்ட் மிஸ் இட்!

-----------------
சசிக்குமார் ட்விட்டரில் இணைந்திருக்கிறாராம். அவருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!
ஒரு பிரபலம் சமூக தளங்களுக்கு வருவதில் பல அனுகூலங்கள் உண்டு. ரசிகர்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கலாம்; தன் படங்கள் பற்றிய செய்தியை நேரடியாகப் பகிர்ந்துகொள்ளலாம். தன்னைப் பற்றிய எதிர்மறைச் செய்திகளை உடனுக்குடன் மறுக்கலாம்.
அதே நேரத்தில் இதில் ஒரு பெரும் சிக்கலும் உண்டு. ஒரு தனி மனிதராக பிரபலங்களுக்கும் விருப்பு, வெறுப்புகள் இருக்கும். கோப, தாபங்கள் வந்து போகும். இணையத்தில் நாம் இல்லையென்றால், சில நாட்களில் அவை மறைந்து, மறந்து போகும். இணையத்தில் இருந்தால், சட்டென்று ஸ்டேடஸ் போடத் தோன்றும். அது வரலாறாக நிற்கும்!
உதாரணமாக, அனுபம்கெர் தனக்கு பத்ம விருதுகள் கிடைக்காதபோது ‘எல்லாம் ஏமாற்றுவேலை’ ரேஞ்சில் ஒரு ஸ்டேடஸ் போட்டுவிட்டார். சமீபத்தில் அவருக்கு கொடுக்கப்பட்டபோது ‘பெருமையா இருக்கு’ என்றார். நம் மக்கள் பிடித்து, கழுவிக்கழுவி ஊற்றினார்கள்.
சமீபத்தில் விஷால்-லிங்கு பிரச்சினையில் விஷால் போட்ட ஸ்டேடஸும் துரதிர்ஷ்டவசமானது. இவையெல்லாம் தற்காலிக உணர்ச்சிகள். இதைப் பதிவு செய்யாமல் தப்பிக்க, நிதானமும் கொஞ்சம் சுரணையற்ற தன்மையும் வேண்டும்.
இதோ, எனது பிரேமம் பதிவிற்கு பின்நவீனத்துவ அறிவுஜீவிகள் முதல் ரசிகக்குஞ்சுகள்வரை எதிர்வினையாற்றிக்கொண்டிருக்கிறார்கள். மெல்லிய புன்னகையுடன் கடந்து போகிறேன். காரணம், எல்லாவகைப் பொங்கலையும் வலையுலகிலேயே செய்து டயர்டு ஆகி, இது நேர விரயம் என்று புரிந்ததால் தான்.
சசிக்குமார் ஒரு உணர்வுப்பூர்வமான மனிதர். அவருக்கு இணையம் சரிப்பட்டு வருமா என்று கவலையாக இருக்கிறது. பீ கேர்ஃபுல் ப்ரோ!
------------
கேரள அரசின் மாநிலதிரைப்பட விருதுகளில் ஒன்றுகூட பிரேமம் படத்திற்கு வழங்கப்படவில்லை. இதற்கு பலரும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகிறார்கள். ஆனால், தேர்வுக்குழுவின் முடிவை நான் முழுமனதுடன் வரவேற்கிறேன்.
டெக்னிகலாக பிரேமம் நல்ல படம். அல்போன்ஸ்புத்திரன், பஹத், நிவின்பாலி போன்ற இளைஞர்களின் வரவால், கேரள சினிமா புதிய தோற்றப்பொலிவை அடைந்திருப்பதற்கு பிரேமம் ஒருசாட்சி. கதையில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தினாலும், விஷுவலாக குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிய பழைய மல்லுவுட்டை புதிய பாதையில் இந்த இளைஞர்படை திருப்பியுள்ளது.
ஒரு கொண்டாட்ட மனநிலையில் எடுக்கப்பட்டு, அதே கொண்டாட்ட மனநிலையை ரசிகனுக்குள் கடத்திய படம் பிரேமம். எல்லோரும் ஜாலியாக அந்த படத்தை எடுத்துக்கொண்டிருந்தாலும், படத்தில் சில நெருடல்களும் இருந்தன.
பேரமத்தில் வரும் முதல் காதலைக்கூட இனக்கவர்ச்சியை பதிவு செய்தார்கள் என்று விட்டுவிடலாம். ஆனால் மீதி இரு காதல்களிலும் அறப்பிரச்சினை இருந்தது.
ஆசிரியைக்கும் மாணவனுக்கும் காதல் என்று காட்டுவது ஆபாசமானது மட்டுமல்ல, ஆபத்தானதும்கூட. பதின்பருவ மாணவர்களை உளவியல்ரீதியாக பாதிக்கக்கூடிய விஷயம் இது. அதை மலர் எவ்வித எதிர்ப்பும் இன்றி ஏற்றுக்கொள்வது இன்னும் மோசமான முன்னுதாரணம் ஆகிறது.
அடுத்த காதலில் வரும் வயது வித்தியாசம் சகஜமானது தான். ஆனால் கிளைமாக்ஸில் அல்போன்ஸ் வைத்திருந்த விஷுவல்ஸ், வக்கிரமானது. சிறுகுழந்தையும் நிவின்பாலியும் பேசிக்கொள்ளும் அந்தக் காட்சியைப் பார்க்கவேஅருவெறுப்பாக இருந்தது. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை சகஜமான தேசத்தில், இத்தகைய விஷுவல்ஸை தவிர்க்கும் கடமை ஒரு படைப்பாளிக்கு இருக்கிறது.
பிரேமம் என்பது ஆட்டோகிராஃபும், அட்டக்கத்தியும் கலந்த கலவை தான். ஆனால் சேரனிடமும், ரஞ்சித்திடமும் இருந்த பொறுப்புணர்வு அல்போன்ஸ்புத்திரனிடம் இல்லை.
’ஜாலியா ஒரு படம், டெக்னிகலாக புதுவழியைக் காட்டும் படம், வாழ்க்கைக்கு நெருக்கமான ஒரு படம்’ என்று இளைஞர் பட்டாளம் பல காரணங்களுக்காக இந்த படத்தைக் கொண்டாடும்போது, யாரேனும் ஒரு பெரியவர் இதைக் கொண்டாடுவதில் உள்ள ஆபத்தையும் சுட்டிக்காட்ட வேண்டியது கட்டாயம்.
அதை கேரள அரசு சரியாகச் செய்திருக்கிறது. ”தொழில்நுட்பம் மற்றும் அழகிய ரீதியில் படங்கள் சிறப்பாக இருந்தாலும் கல்வி மற்றும் கலாசார விழுமியங்களைப் பிரசாரம் செய்வதையும் பரிசீலனை செய்யவேண்டும் ” என்று ஆணித்தரமாக தந்தரப்பை நியாயப்படுத்தி இருக்கிறது.
பாரதிராஜா எனும் மகாகலைஞன் ‘வாலிபமே..வா..வா’என்று படம் எடுத்தபோது, மக்களே படத்தை தூக்கி எறிந்தார்கள். பிறகு தான் நமக்கு முதல் மரியாதை போன்ற முத்துக்கள் கிடைத்தன. எனவே ஒரு திறமையான படைப்பாளி தவறான வழியில் போகும்போது, அவர்களை தலையில் குட்டி, நல்வழிப்படுத்துவது அவசியம்.
அதைத் தான் கேரள அரசு செய்திருப்பதாக நான் புரிந்துகொள்கிறேன். ‘பரிசீலனைக்குக்கூட தகுதியற்ற படம்’ என்று சொல்லியிருப்பது நிச்சயம் படக்குழுவிற்கு வலிக்கவே செய்யும். வலி, நல்வழியைக் காட்டும்.
அறத்தை மறந்தவன், நல்ல வியாபாரி ஆகலாம்; படைப்பாளி ஆகமுடியாது!


------------------
ஒருவழியாக, ஆஸ்காருக்கு இன்று ’டிகாப்ரியோ விருது’
கிடைத்துள்ளது.
ஆஸ்காருக்கு வாழ்த்துகள்!
---------------------
மாயா - must watch film
படம் பார்த்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. இன்னும் படம் கொடுத்த பிரமிப்பில் இருந்து மீள முடியவில்லை.
இழைத்து, இழைத்து செதுக்கப்பட்ட திரைக்கதை. இரண்டு கதைகள்..அவை இணையும் விதம்...திகில் கிளப்பும் சீன்கள்..அருமையான ஒளிப்பதிவு..அலற வைக்கும் எடிட்டிங்..நீண்ட நாட்களுக்குப் பிறகு, ரசிக்க வைத்த பிண்ணனி இசை.
நயந்தாரா...என்ன ஒரு மெச்சூரிட்டியான நடிப்பு.’அந்த கேரக்டராகவே வாழ்ந்தார்’ என்று சொல்வார்கள் இல்லையா? அப்படி நயந்தாரா வாழ்ந்திருக்கும் படம்.
சில படங்கள், நல்ல சினிமா பார்த்த திருப்தியைத் தரும். வெகுசில படங்கள் தான், அதன் இயக்குநருக்கு மரியாதையைத் தரும். அப்படிப்பட்ட படம், இந்த மாயா.
இயக்குநர் அஸ்வின் சரவணன் நம்பிக்கை தரும் இயக்குநராகத் தெரிகிறார்.
இவ்வளவு தரமான படத்தைக் கொடுத்த இயக்குநர் பற்றி அறிவோம் என்று இணையத்தில் தேடினேன். குமுதத்திற்கு அவர் கொடுத்த பேட்டி, கண்ணில் பட்டது. இந்த அற்புதமானஇயக்குநரிடம், அந்த அற்புதமான பத்திரிக்கை கேட்ட கேள்வி: ““சின்ன வயசா வேற இருக்கீங்க. நயன்தாராவுக்கு இப்போ பசங்க மத்தில பெரிய கிரேஸ். நீங்க நயன்தாராவை நேர்ல சைட் அடிச்சீங்களா..?”
விளங்கிரும்!
-------------------
ஏ புள்ளே, நீ எதிர்க்கட்சியைத் திட்டு..
மச்சான், நீ ஆளும்கட்சியைத் திட்டு..
நான், எல்லாரையும் திட்டறேன்.
இப்போ என்ன ஆச்சு?
எல்லாரும் குழம்பிட்டாங்க!
சியர்ஸ்!
மறுபடியும்...ஏ புள்ளே, நீ ஆளும்கட்சியைத் திட்டு..
மச்சான்....
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.