Saturday, June 25, 2016

ஃபேஸ்புக்கில் யோசிச்சேன்...28

அப்போது நான் கோவையில் வேலை செய்துகொண்டிருந்தேன். நான் வேலைபார்த்த ஆபீஸில் திடீரென சிக்கன நடவடிக்கைகள் ஆரம்பம் ஆகின. ‘நிறைய காஃபி, டீக்கு செலவாகுது. அதனால இனிமே ஒருநாளைக்கு ஒருத்தருக்கு இரண்டு காஃபி தான்’ன்னு மீட்டிங்ல அனவுன்ஸ் பண்ணாங்க.
எனக்கு பயங்கர கோபம் வந்துவிட்டது. ஒருநாளைக்கு பன்னிரெண்டு மணி நேரத்திற்கு மேல் வேலை செய்கிறோம். அதற்கு ஓ.டி.யும் கிடையாது. இப்போது காஃபியும் கிடையாது என்றால் என்ன அர்த்தம்? நான் ஒரு காஃபி வெறியன். அதனால் ‘போங்கடா..உங்க ரெண்டு காஃபி கூட வேண்டாம். நான் வெளில போய் குடிச்சுக்கிறேன்’னு சொல்லிவிட்டேன்.
அதில் இருந்து, எல்லோரும் காஃபி/டீ குடித்தாலும், நான் ஆபீஸில் குடிப்பதில்லை. அந்த நேரத்தில் தான் ஒரு பொண்ணு புதிதாக வேலையில் ஜாயின் செய்தது.
கொஞ்சநாளிலேயே அது என்னுடன் நட்பாகிவிட்டது. ஒருநாள் அந்தப் பெண்ணின் வீட்டுக்குப் போயிருந்தேன். அப்போது தான் அந்த சத்திய சோதனை ஆரம்பம் ஆனது!
அந்தப் பெண்ணின் அம்மா சமையல்கட்டில் இருக்கும்போதே, எனக்கு காஃபி வாசம் வந்துவிட்டது. வீட்டு காஃபி சாப்பிட்டு பல மாதங்கள் ஆகியிருந்தது. ‘வாசமே இப்படி இருக்கே...வரட்டும், வரட்டும்’ன்னு ரெடியாகி உட்கார்ந்திருக்கிறேன்.
அந்த அம்மா ஒரு காஃபி ட்ரேயில் அழகாக வைத்து, காஃபியை எனக்குக் கொண்டுவருகிறார். குணா கமல் லட்டுக்கு நின்றது போல், கையேந்தாத குறையாக நான் அவரைப் பார்க்கிறேன்.
அந்தம்மாவைப் பார்த்த பெண் டென்சன் ஆகிவிட்டார். “அம்மா..ஏன்ம்மா காஃபி போட்டே?” என்றார். ‘அதுல உனக்கு என்னம்மா பிரச்சினை?’ன்னு நான் யோசிக்கும்போதே, அந்தப் பெண் சொன்னது :”அவர் காஃபி, டீ எதுவும் சாப்பிடமாட்டார். வெரி ஹெல்த் கான்ஷியஸ் பெர்சன்!”.
”அவ்வ்..அடிச்சண்டாளி...அப்படியெல்லாம் பேசாதடீ”ன்னு நான் மனசுக்குள் கெஞ்சறேன். ம்ஹூம். அந்தம்மாவும் ‘பரவாயில்லைம்மா..ஒரு தடவை சாப்பிடட்டும்”ன்னு சொல்றாங்க. ’புண்ணியவதி நல்லா இருக்கணும்’னு நான் நினைக்கிறேன். ஆனாலும் மகள் விட்டால் தானே?
“நோ..நோ..அப்படியெல்லாம் கம்பெல் பண்ணக்கூடாது. அவருக்கு எந்த கெட்டபழக்கமும் கிடையாது தெரியுமா?”ன்னு அடுத்த குண்டு விழுகிறது.
‘மூஞ்சிகிட்ட வரைக்கும் கொண்டுவந்துட்டு ஏம்மா அக்கப்போர் பண்றீங்க? ஒரே ஒரு காஃபியை குடிச்சா, உலகமா அழிஞ்சிடப்போவுது?’ன்னு கண்ணீர் விடாமல் மனதுக்குள் கெஞ்சுகிறேன், கதறுகிறேன்.
அந்தம்மாவும் சொல்லிப்பார்க்கிறார். நான் காஃபியையும் அந்த பெண்ணையும் மாறிமாறி பரிதாபமாகப் பார்க்கிறேன். கடைசியில் ஸ்லோமோசனில் அந்த காஃபி பின்வாங்கி, கிச்சனுக்கே போய்விட்டது.
பிறகு அந்தப் பெண் சொன்னது : ‘சார்..வீட்டுக்கு வந்துட்டு நீங்க சும்மா போகக்கூடாது. தண்ணியாவது குடிக்கணும்!”
இனிமே வீட்டுப்பக்கம் வரவேண்டாம்னா நேரா, டீசண்டா சொல்லு..அதை விட்டுப்போட்டு இப்படியா பண்றது? என்றா உலகம் இது!


-------------
இயக்குநர்கள் என்ற பெயரில் பலர் வந்தாலும், சிலர் தான் ஃபிலிம் மேக்கர், Auteur போன்ற வார்த்தைகளுக்கு தகுதியானவர்கள் ஆகிறார்கள். அந்த வகையில் வந்த ஹிட்ச்காக், ஸ்பீல்பெர்க், ஸ்கார்செஸி போன்றவர்கள் எல்லாம் சென்ற தலைமுறையைச் சேர்ந்தவர்கள்.
அதன்பின் புதிய தலைமுறை ஒன்று உருவானது. அதில் முக்கியமானவர் Paul Thomas Anderson. PTA என்றும் PT Anderson என்றும் அவரது ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர். சென்ற ஒரு மாதமாக அவரது படங்களில் தான் மூழ்கிக்கிடந்தேன். ஒரு இயக்குநரின் படங்களை காலவரிசையில் பார்க்கும்போது, அவர்களின் வளர்ச்சியை கண்கூடாகப் பார்த்து ரசிக்க முடிகிறது.
Hard Eight என்ற சிம்பிளான படத்துடன் ஆரம்பித்தாலும், அடுத்து அவர் கொடுத்த படங்கள் எல்லாம் மரணமாஸ். அதில் எனக்கு மிகவும் பிடித்த படங்கள்:
1. Boogie Nights :
போர்னோகிராபி உலகிற்குள் இறங்கி, அந்த உலகத்தை அலசி ஆராய்ந்த படம். அந்த மாதிரிப் படத்தின் ஹீரோ தான் கதை நாயகன். அவனது மற்றும் அவனின் குழுவின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் நீட்டான ஸ்க்ரிப்ட்டில் சொல்லியிருப்பார். ’கிளைமாக்ஸில் மிரட்டிவிட்டார்’ என்று சொல்வார்களே, அது இந்த படத்திற்கு சாலப் பொருந்தும்!
2. Magnolia:
அப்பாக்களுக்கும் குழந்தைகளுக்குமான உறவைப் பற்றிப் பேசியபடம். அதற்காக ‘பசங்க’ போன்ற படம் என்று நினைத்துவிடாதீர்கள். PTA எழுதியதிலேயே கஷ்டமான திரைக்கதை இது தான் என்பது என் முடிவு. இரண்டு அப்பாக்கள், அவர்களின் பிள்ளைகள், அந்த பிள்ளைகளின் உலகம் என்று துண்டு துண்டாக நடக்கும் சம்பவங்கள், கொஞ்சம் கொஞ்சமாக ஒன்றாகக் கலப்பது அழகு.
3. There Will Be Blood:
பெட்ரோலியக் கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில், அதைப் பயன்படுத்தி பெரும் பணக்காரன் ஆன ஒருவனின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் பேசிய படம். ஹீரோ என்று யாருமில்லை. மெயின் கேரக்டர் வில்லன் தான். ஆனாலும் அந்த கேரக்டரில் நடித்த Day-Lewis ரசிக்க வைத்தார்; ஆஸ்கார் வென்றார்.

-------------------------
PTA இயக்கிய The Master படத்தினை நேற்று இரவு பார்த்தேன். அதற்குரிய மனநிலையுடன் பார்த்தால், அதுவொரு அருமையான படம்.
’அதற்குரிய மனநிலை’ என்றால்...
பொதுவாக நமது படங்கள் எல்லாமே Plot Driven வகைகள் தான். இயல்பு வாழ்க்கையில் இருப்பார்கள். ஏதோவொன்று நடக்கும். அது வாழ்க்கையைப் புரட்டிப்போடும். அதில் இருந்து மீண்டுவருவார்கள். மீண்டும், எதிர்சக்தி அவர்களை கீழே இழுத்துப்போடும். இறுதியாக வெற்றி பெறுவார்கள். மொத்தத்தில், குறிப்பிடும்படியான சம்பவங்களுடன், கதையில் சில விஷயங்கள் நடக்கும்.
இன்னொருவகை, Character Driven..சில கேரக்டர்களின் வாழ்க்கையில் நடக்கும் சில விஷயங்களைப் பதிவு செய்வது தான் இவ்வகைப் படங்களின் நோக்கம். கீ இன்சிடெண்ட், ஆல் இஸ் லாஸ்ட், லொட்டுலொசுக்கு இல்லாமல், அமைதியான ஆறுபோல் வாழ்க்கையின் போக்கிலேயே போய் ‘இங்கே, இப்படி நடந்தது’ என்று சொல்பவை இவ்வகைப் படங்கள்.
சில சுவாரஸ்யமான சம்பவங்களும், (சில படங்களில்) ஃபீல் குட் உணர்வும் தான் கமர்சியல் அம்சங்கள். சராசரி ரசிகன், இரண்டு தூக்கம் போட்டு எழுந்தாலும் கதை அதே இடத்தில் தான் நிற்கும். ஒன்றும் ஆகிவிடாது.
நேற்று ’The Master’ பார்த்தேன். கூடவே தங்கமணியும் அமர்ந்திருந்தார். அரைமணி நேரத்தில் வெறுத்துப்போய், ‘போய்யா..நீயும் உன் உலக சினிமாவும்’ என்று திட்டிவிட்டுப் போய்விட்டார். ஆனாலும் விதி வலியது அல்லவா?
இன்று ஒரு தமிழ்ப்படத்திற்குப் போனோம். அதே ’The Master’வகைப் படம். படம் ஆரம்பித்து, ஒருமணி நேரம் கழித்து தியேட்டரில் ஒரு குரல் ‘என்ன இது, ஒன்னுமே நடக்கலை?’. படம் ஸ்மூத்தாகப் போகிறது. சில அற்புதமான தருணங்கள், சிரிக்க வைக்கும் சில காட்சிகள், ஹீரோ-ஹீரோயின் இருவரின் அட்டகாசமான பெர்ஃபார்மன்ஸ் என எல்லாம் இருந்தும், ’Nothing happens' ஃபீலிங் தான் பலருக்கும்.
நான் படத்தினை எஞ்சாய் செய்து பார்த்தேன். கிளைமாக்ஸில்கூட ஒன்றும் நடக்காது என்று The Master புண்ணியத்தில் புரிந்துபோய்விட்டது. எனவே Plot-ஐ எதிர்பார்க்காமல், சம்பவங்களை ரசித்துப் பார்த்தேன். தங்கமணி உள்ளிட்ட ஆடியன்ஸ் தான் பொறுமையிழந்து போனார்கள். கமர்சியல் சினிமாவில் இது புதிய முயற்சி என்பதால் பாராட்டலாம்.
அந்த படத்தின் இயக்குநருக்கு விமர்சனம் பிடிக்காது. எனவே.....பார்க்கலாம்!

--------------
இங்கே ஒருநாள் முன்பே படங்கள் ரிலீஸ் ஆகிவிடும். நமது விமர்சனங்களின் மகிமையாலோ என்னவோ, இப்போதெல்லாம் வெள்ளிக்கிழமை மாலைக்காட்சியில் தான் படங்களை ரிலீஸ் செய்கிறார்கள். அதற்குள் நம் ஊரில் இருந்தே விமர்சனங்கள் வந்து (காப்பாற்றி) விடுகின்றன.
ஆனாலும் போக்கிரி ராஜாவை பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஜீவாவின் 25வது படம் என்பதாலும், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் இயக்குநரின் படம் என்பதாலும்!
வெள்ளிக்கிழமை வேறுவேலை இருந்ததால் போக முடியவில்லை. நண்பர்கள் நான்குபேர் போனார்கள். பாதிப் படத்திலேயே வெளியேறி வந்துவிட்டார்கள். அவர்கள் மட்டும் வந்தால் பரவாயில்லை, நான்கு வரிசைகளில் இருந்த ஆட்கள் மொத்தமாக வெளியேறியிருக்கிறார்கள். (புலியைவிட மொக்கையா இருக்கிறதே என்று கமெண்ட் அடித்தார்களாம்..என்ன ஒரு கேவலம்!)
அஞ்சானுக்குப் பிறகு, ரசிகர்களின் கடும் கண்டனத்தை வாங்கிய படமாக போக்கிரி ராஜா ஆகியிருக்கிறது. இத்தனைக்கும் ‘ தமிழுக்கு..அழுத்தவும்’ படத்தில் அழுத்தமான திரைக்கதை இருந்தது. மூன்று வெவ்வேறு கதைகளை அழகாக கோர்த்து திரைக்கதை அமைத்திருந்தார் ராம்பிரகாஷ் ராயப்பா. இந்த தலைகீழ் மாற்றம் நமக்கு மிகுந்த அதிர்ச்சி கொடுக்கிறது.
ராம், கற்றது தமிழ் என ஜீவா முன்பு அருமையான படங்களாக தேர்ந்தெடுத்து செய்துகொண்டிருந்தார். திடீரென கமர்சியல் ஹீரோ ஆசை வர, கச்சேரி-தெனாவட்டு என மொக்கை ரூட்டில் இறங்கினார். அதில் இருந்து சறுக்கல் தான். நம்முடைய ஆசையெல்லாம் அவர் ‘பழைய ஜீவா’வாக வரவேண்டும் என்பது தான். விகடன் விமர்சனத்தில் சொன்னது போல...ப்ளீஸ், இன்னொருமுறை இப்படிப் பண்ணாதீங்க ஜீவா!

---------------
இந்த வார ரிலீஸ்களில் நான் ஆவலுடன் எதிர்பார்க்கும் படம், மாப்ள சிங்கம்.
நண்பர் டான் அசோக், தன் சுவாரஸ்யமான எழுத்துக்களால் வலைப்பூ காலத்திலிருந்தே நம்மைக் கவர்ந்தவர். அவரது வசனத்தில் மாப்ள சிங்கத்தின் ட்ரெய்லரிலேயே கலகலப்பு தெறிக்கிறது.
நீண்ட நாட்களாக ஒரு வெற்றிக்கு போராடும் விமலுக்கு இந்த படம் ஒரு பிரேக் கொடுக்கும் என்று நம்புகிறேன். (ஏற்கனவே இண்டஸ்ட்ரியில், படம் பற்றி பாசிடிவ் டாக்!)
படம் வெற்றி பெறவும், நண்பர் மென்மேலும் வளரவும் எமது வாழ்த்துகள்!

-----------
அண்ணே, ரசிகனுக்கும் தொண்டனுக்கும் என்ன வித்தியாசம்ணே?
அடேய், ’பொட்டி எப்ப வரும்?..படம் எப்போ ஆரம்பிக்கும்’ன்னு காத்திருக்கிறவன் ரசிகன். ‘பொட்டி எப்போ வரும்?..பிரச்சாரம் எப்போ ஆரம்பிக்கும்’னு காத்திருக்கிறவன் தொண்டன்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comment:

  1. என்னைக் கவர்ந்தது........................கடேசி பாரா+காஃபி...........

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.