Thursday, March 17, 2016

ஃபேஸ்புக்கில் யோசிச்சேன்...12



பாகுபலி பார்த்துட்டு வந்து’ கட்டப்பா ஏன் கொன்னாரு?’ன்னு கேட்டே..அது பரவாயில்லை. இப்போ புலி பார்த்துட்டு வந்து ‘கருஞ்சிறுத்தைக்கு புதருக்குள்ளே என்ன நடந்துச்சு?’ன்னு கேட்கிறே! ஒரு பெரிய மனுசன் கேட்கிற கேள்வியா இது?
-------------------------
ஆஹா..ஆஹா..எதிர்பார்த்த மாதிரியே இப்போதும் எங்கள் தலைவி ஸ்ருதி அடி தூள் பின்னிவிட்டார்.
இதுவரை தலைவி தரிசனம் தந்த படங்கள்:
ஹே ராம்
ஏழாம் அறிவு
3
பூஜை
அத்தனையும் சூப்பர் டூப்பர் ஹிட்ஸ் என்று நாம் சொல்லித் தெரியவேண்டியது இல்லை. இப்போது புலி!
ஃபேன்டஸி காமெடி, விஜய், சிம்பு தேவன், பிரமாண்டப் படைப்பு என்று பல 'நெகடிவ்' விஷயங்கள் இருந்தாலும், தலைவி இருப்பதால் எப்படியும் படம் ஓடிவிடும் என்று நம்பினோம். இதோ, ஓடிவிட்டதே!
புலியில் ஒரு வேதாளக் கூட்டத்தையே துவம்சம் செய்திருக்கும் தலைவி கையில், அடுத்து ஒரு சிங்கிள் வேதாளம் சிக்கியிருக்கிறது. என்ன ஆகப் போகுதோ!
------------------------
காந்தி ஏன் கொண்டாடப்படுகிறார், கொண்டாடப்பட வேண்டும் என்பதற்கு எவ்வளவோ காரணங்கள். அதில் சில..

1. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் கணக்கு வழக்கு, காந்தியின் கையிலேயே இருந்தது. நினைத்துப் பாருங்கள், ஒட்டுமொத்த இந்தியாவில் சாமானியர்கள் முதல் பணக்காரர்கள்வரை அவரிடம் கொடுத்த கணக்கு வழக்கற்ற பணம். அதில் இருந்து அவர் எவ்வளவு வேண்டுமானாலும் தனக்கோ, தன் குடும்பத்திற்கோ ஒதுக்கி இருக்கலாம். அல்லது, தன் பெயரில் ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து சாமர்த்தியமாக தன் வம்சம் வாழ வழி செய்திருக்கலாம். ஆனால் அவரது கொள்கை எதிரிகளால்கூட, அவர் ஐந்து பைசாவை கையாடல் செய்தார் என்று சொல்ல முடியாது. அத்தனை பணமும் தனக்கல்ல, தன் கொள்கைக்கும் போராட்டத்திற்கும் எனும் தெளிவு!

2. உலகில் நடந்த எந்தவொரு போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர்களும், அந்தப் போராட்டத்தின் பலனை அதிகம் அனுபவித்தவர்களாக அவர்களே இருந்திருக்கின்றனர், மன்னர்/பிரதமர்/முதல்வர் என! சுதந்திரப் போராட்டம் முடிந்ததும், காந்தியே பிரதமராகவோ ஜனாதிபதியாகவோ ஆகையிருக்க முடியும். ஆனால் ஒரு துறவியைப் போல, அவர் ஒதுங்கினார்.

போராட்டக் காலத்தில் தனக்கென்று பணத்தையும் சுருட்டாமல், பதவியையும் எதிர்பாராமல் மக்கள் நலனுக்காக உழைத்ததால்தான், இன்றைய இணைய புத்திசாலிகளால் அவர் தூற்றப்படுகிறார். அவர்களிடம் எப்போதும் பொதுவாக நான் கேட்கும் கேள்வி ஒன்று தான். மேலே கூறிய இரண்டு விஷயத்தில், நீங்கள் மதிக்கும் தலைமை எப்படி? அத்துடன் விவாதம் முடிந்துவிடும்!

ஹேப்பி பர்த் டே, காந்தி தாத்தா!
----------------------------------------------------
அப்படி என் கட்சிக்காரர் விஜய் என்ன தவறைய்யா பண்ணி விட்டார்? சும்மா பில்டப்புக்காக 100கோடி பட்ஜெட், 110 கோடி பட்ஜெட் என்று அள்ளிவிட்டால், அதையெல்லாமா நம்பிக்கொண்டு ரெய்டுக்கு வருவது?
சரி, அதாவது பரவாயில்லை. எனது அடுத்த கட்சிக்காரர் நயந்தாரா என்ன பாவம்யா செய்தார்? ஏதோ சேலத்தில் ரசிகக்குஞ்சுகள் கொஞ்சம் அதிகமாக கூடிவிட்டார்கள். கூடவே ஃபேஸ்புக்கில் சில ஃபீலிங் பெரிசுகள்’ வருங்கால சி.எம்.வாழ்க என்று கூவிவிட்டார்கள். அதற்காக இப்படியா செய்வது?
ஓகே, ஒரு நடிகர் வீட்டில் அல்லது நடிகை வீட்டில் ரெய்டு செய்வது கூடப் பரவாயில்லை. சமந்தா என்ற மெழுகுபொம்மை வீட்டில் ஏன்னய்யா ரெய்டு? ஒரு பொம்மையிடம் காசு பிடுங்கித் தான் இந்த கவர்மெண்ட் நடக்கவேண்டுமா? வெட்கம், வெட்கம்!
-------------------------------
திரைக்கதை பற்றி கற்றுக்கொள்வதற்கு இருக்கும் ஒரு வழி, ஒரே கதையை இருவேறு திரைக்கதையாசிரியர்கள் எப்படி அணுகியிருக்கிறார்கள் என்று ஸ்டடி செய்வது.
Patricia Highsmith என்பவர் 1955ல் எழுதிய நாவல் The Talented Mr. Ripley.
இது 1960ல் Purple Noon (French Title :Plein Soleil) என்ற ஃப்ரெஞ்ச் படமாக வந்து சூப்பர் ஹிட் ஆனது. அட்டகாசமான த்ரில்லர் படம் அது.
மீண்டும் அதே கதை, 1999-ல் The Talented Mr. Ripley எனும் நாவலின் பெயரிலேயே வெளியானது. இது ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர்.
முதல் படம் மிகவும் சிம்பிளான, நேரடியான த்ரில்லர். ஆனால் இரண்டாவது கொஞ்சம் சிக்கலானது. சில சைக்காலஜிக்கல் விஷயங்களையும் சேர்த்திருப்பார்கள். கொஞ்சம் அடர்த்தியான படம் இது.
இரண்டையும் ஒரே நேரத்தில் பார்க்கும்படி சிபாரிசு செய்கிறேன்.
கதை….
நாவலின் நாயகன் ஒரு அனாதை, வாழ வழி தேடி அலைபவன். அதே நேரத்தில் போர்ஜரி, கோல்மால் வேலைகள் செய்வதில் வல்லவன்.
அந்த ஊர் பணக்காரருக்கு ஒரு பிரச்சினை. அவரது மகன் அவரிடம் கோபித்துக்கொண்டு, வேறு ஊரில் வாழ்கிறான். அவரது பணத்தை மட்டும் மாதாமாதம் பெற்றுக்கொண்டு, காதலியுடன் வாழ்க்கையை எஞ்சாய் பண்ணுகிறான். அவனைத் திருத்தி, தந்தையிடமே கொண்டுவந்து சேர்க்க வேண்டும்.
ரிப்ளே அந்த வேலையை ஏற்கிறான். இதைச் செய்தால் ரிப்ளேக்கு 5000 டாலர்கள் கிடைக்கும். எனவே ரிப்ளேயைப் பொறுத்தவரை இது அவனுக்கு வாழ்வா, சாவா பிரச்சினை.
எனவே ரிப்ளே, அந்த மகனுக்கு கொடுப்பது இரண்டே ஆப்சன் தான். ஒன்று, அவன் திரும்பி வரவேண்டும். அல்லது……………………………..!

------------------------------------------------
அரசியல் சாணக்கியர் என்ற பெயர் முன்பு கலைஞருக்கு இருந்தது. முன்பு என்றால், 2ஜிக்கு முன்பு. அதன்பிறகு, அந்தப் பெயர் ஜெயலலிதா அம்மையாருக்கு போய்விட்டது என்பது தான் நிஜம்.
கூட்டணிக்கட்சிகளை திமுகவிடம் அண்டவிடாமல் செய்வது
2ஜி வழக்கு தீர்ப்பினை சட்டசபை தேர்தலை ஒட்டி, வெளியிட வைப்பது
அட்டாக் பாண்டி எனும் ஆயுதத்தை வைத்து, இனி அழகிரியை ஆட்டிவைக்கப்போவது - என அம்மையார் வைக்கும் ஒவ்வொரு ஸ்டெப்பும் அதகளம்.
அதிகாரம், நீதிமன்றம் முதல் தேர்தல் கமிசன் வரை செல்வாக்கு என்று அம்மையாருக்கு இருக்கும் அனுகூலங்கள் ஏராளம்.
இதுவரை திமுகவை அல்லது அதிமுகவை ஆட்சியில் ஏற்றியது இரு விஷயங்கள் தான்:
1. ஆளும் கட்சியின் ஆட்சி மீதான அதிருப்தி
2. எதிர்க்கட்சி அமைக்கும் கூட்டணி வியூகம்
இம்முறை எதிர்க்கட்சி கூட்டணியில்லாமல் நிற்க வேண்டிய நிலையை வெற்றிகரமாக ஆளும்கட்சி உருவாக்கிவிட்டது.
எந்தக் கட்சியுடன் சமரசமாகப் போகும் காந்தியவாதியாகவே கலைஞரின் திமுக இருந்துவந்திருக்கிறது. நாளைக்கு அவங்க தேவைப்படுவாங்களோ எனும் கணக்கு அங்கே ஓடிக்கொண்டிருக்கும். அதிமுகவில் அந்தக் கதையே கிடையாது. ஆனாலும் ‘2ஜி தீர்ப்புஎனும் பூதமும், அதிமுகவின் சாணக்கியத்தனமும் சேர்ந்து, கூட்டணிக் கட்சிகள் திமுகவை விட்டு விலகி நிற்கின்றன.
கூட்டணிக்கான எல்லாவகையான சாம,தான,பேத, தண்டங்களும் பயனற்றுப் போன நிலையில், திமுக மீதமிருக்கும் ஒரே ஆயுதமானஆளும்கட்சி மீதான மக்களின் அதிருப்தியை நம்பி களத்தில் இறங்க வேண்டிய நிலை. அது தான் நமக்கு நாமே!
ஸ்டாலினின் நடைபயணம் பற்றி பல கேலி பதிவுகளை ஃபேஸ்புக்கில் பார்க்கிறோம். இவையெல்லாம் ஏற்கனவே ஃபேஸ்புக்கில் திமுக மேல் வெறுப்பை கக்கிக்கொண்டிருந்தவர்களின் வேலையாகவே இருப்பது வெளிப்படை. ஃபேஸ்புக் உலகைத் தாண்டி, நிஜ உலகில் ஸ்டாலினின் பயணம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது நிஜம். கோவில்பட்டி பகுதியில் ஸ்டாலினுக்காக மக்கள் காத்திருந்து, சந்திக்க முடியாமல் திரும்பியிருக்கிறார்கள். கட்சிக்கு புகார் போயிருக்கிறது. அதாவது, ஸ்டாலினின் பயணத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதே பெரும் மாறுதல் தான். வழக்கம்போல், இந்த மடம் இல்லேன்னா...எனும் நொந்த மனநிலைக்கு மக்கள் வந்துகொண்டிருப்பதற்கான சாட்சி அது.
அம்மையார்எம்.ஜி.ஆர்ஓட்டுக்களை வைத்துத்தான் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். ஆனால் இன்று அவருக்கு விழும் ஓட்டுகள், அவரது பெயருக்காகவே விழுபவை என்பது நிஜம். அவர் எப்போதோ எம்.ஜி.ஆர் எனும் கவசத்தை விட்டு வெளியேறி, தனக்கான செல்வாக்கை உருவாக்கிவிட்டார்.
அதையே இப்போது ஸ்டாலினும் செய்ய ஆரம்பித்திருக்கிறார். கலைஞர் முதல்வர் நாற்காலியை விட்டுத்தராதது, ஸ்டாலின் மேல் அனுதாபத்தைக் கூட்டியிருக்கிறது.
கூட்டணிக் கட்சிகள், தந்தை என எல்லோரும் கைவிட்ட நிலையில் மக்களை மட்டுமே நம்பி, தெருவில் அலையும் ஸ்டாலின்’ - என்பது தான் ஃபேஸ்புக் கிண்டலின் தொகுப்பு. ஆனால் அது தான் மக்களை ஸ்டாலின் பக்கம் ஈர்க்கப்போகிறது.
ஆனாலும் அதிமுகவிற்கு இருக்கும் தனிப்பட்ட, அதிக ஓட்டுவங்கி + அம்மையாரின் சாணக்கியத்தனத்தை தாண்டி, ஸ்டாலின் வெல்வாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி.
ஆம் வெயிட்டிங்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.