தெனாலி படம் பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. கமலுக்கு இணையாக ஜெயராம் கலக்கியிருந்தார். பல பத்திரிக்கைகளும் அதைக் குறிப்பிட்டு பாரட்டியிருந்தனர்.
அதன்பிறகு பஞ்சதந்திரத்தில் அவரைப் பார்த்தபோது.... frown emoticon
அன்பே சிவத்தில் மாதவனுக்கும் கமலுக்கு இணையான கேரக்டர். கேஷுவலாக நடித்து பாராட்டுப் பெற்றார்.
அவர் நிலைமை மன்மதன் அம்பில் என்ன ஆனது என்பது நீங்கள் அறிந்ததே!
தற்போது XXX படத்தில் ஆஷா சரத் என்ற நடிகை, கமல் அளவிற்கு பின்னியெடுத்துவிட்டார்.
அப்போ........?
கமல் அடுத்து நடிக்கும் படத்தின் ஒரிஜினலை ஏற்கனவே பார்த்துவிட்டேன்.(கமலுக்கு அது இன்னொரு ஹிட்!) அதில் ஒரு செமயான போலீஸ் கேரக்டர் வருகிறது. கூடவே ஒரு டம்மி மனைவி கேரக்டர் வருகிறது. நான்கு ஃபோன் பேசுவது தான் அந்த மனைவி கேரக்டரின் வேலை. பத்திரிக்கைகளில் போலீஸ் கேரக்டரை ’கமலா காமேஷும்’, மனைவி கேரக்டரை ஆஷா சரத்தும் செய்வதாக செய்திகள் வருகின்றன.
அப்போ, ஆஷா சரத்துக்கும் ஆப்பு ரெடி.......!
விளக்கம் 1: அதென்ன XXX படம் என்று யோசிக்கீகளா? ஏலெ, என்ன செய்யச் சொல்லுதீக..ஒருவாரமா ஃபேஸ்புக்ல அந்தப் படத்தைப் பேரை பாத்துப் பாத்து அலர்ஜியே வந்துட்டுல்ல..
விளக்கம் 2: கடுமையான, மிடுக்கான கேரக்டர்களுக்கு மட்டுமே ஆஷா சரிப்பட்டு வருவார். வேறு எதற்கும் அவர் லாயக்கான ஆள் இல்லை. இது ஒரு அப்பாவி Youtube ரசிகனின் அவதானிப்பூ!!
-------------------------------
சினிமா விமர்சகனாக இருப்பதன் சாபக்கேடு, ஒரு படத்தை முழுக்க லயித்துப் பார்க்கமுடியாமல் போவது. படம் ஓடும்போதே, மனம் குறிப்புகளை எடுக்கத் துவங்கியிருக்கும். இதற்கு முன் வந்த இதே நடிகர்/இயக்குநரின் படம், இதே போன்ற கதை/காட்சிகள் வந்த படங்கள், பார்த்துக்கொண்டிருக்கும் படத்தில் வரும் நல்ல/மோசமான காட்சிகள் மற்றும் வசனங்கள் என பல விஷயங்கள் உள்ளே ஓடிக்கொண்டே இருக்கும். படம் முடிந்தபிறகு தான் விமர்சனம் பற்றி யோசிக்க வேண்டும் என்று நினைத்தாலும், கொஞ்சம் உருப்படியாக விமர்சனம் எழுத வேண்டும் என்றால், இதைச் செய்து தான் ஆகவேண்டும்.
முன்பு ஆங்கிலப்படங்களுக்கும் இதைச் செய்துகொண்டிருந்தேன். இந்தப் பிரச்சினையில் இருந்து என்னை உலுக்கி, வெளியே போட்ட படம் Amores Perros. விமர்சனம் எழுத வேண்டும் என்று பார்க்க ஆரம்பித்து, ’ஐயா..என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று காலில் விழ வைத்த படம். அதன்பின் இன்றுவரை அந்தப் படம் பற்றி ஒன்றுமே எழுதவில்லை. அந்தப் படத்திற்கு மரியாதை செய்ய, அதைவிட நல்லவழி எனக்குத் தெரியவில்லை.
அதிலிருந்து, பிறமொழிப்படங்களை முதன்முறை பார்க்கும்போது ‘சும்மா’ பார்ப்பது என்று வழக்கப்படுத்திக்கொண்டேன். விமர்சனம் என்று எதையாவது கிறுக்குகிறேன் என்றால், அது இரண்டாவது முறையாகப் பார்த்தபிறகு தான். ஹிட்ச்காக் படங்கள் என்றால் 3-4முறை பார்த்தபிறகே எழுதுவது பற்றி யோசிப்பது!
ஆனாலும் Amores Perros போன்ற படங்களைப் பற்றி, முடிந்தவரை ஒன்றும் எழுதுவதில்லை. கமர்சியல் / தமிழ்ப்படங்களைப் பற்றி எழுதிவிட்டு, நல்லபடங்களை உங்களுக்கு சொல்லாமலே போகிறோமே எனும் உறுத்தல் எப்போதும் உண்டு. இதைத் தீர்க்க இப்போது ஒரு எளியவழியை கண்டுபிடித்துவிட்டேன். அந்த படங்களின் ஸ்டில் ”மட்டும்” இங்கே அவ்வப்போது போடுகின்றேன்.
இவை பொழுதுபோக்குப் படங்கள் அல்ல. நல்ல சினிமா பார்க்க வேண்டும் என்று ஆர்வம் உள்ளவர்களும் ’ஆன்லைன்’ திரைப்பட மாணவர்களும் தேடிப் பார்த்துக்கொள்ளவும். முதலில், Michelangelo Antonioni-வின் Blow Up(1966).
ஒரு ஃபோட்டோகிராபர் பார்க்கில் ஒரு ஜோடியை ஃபோட்டோ எடுக்கிறான். அந்த ஃபோட்டோக்களை டெவலப் செய்து பார்க்கும்போது, சம்திங் இஸ் ராங்....அந்த ஃபோட்டோக்களை ஆராயும்போது, ஒரு கொலைக்கான சாட்சியமாக அவை மாறுகின்றன. A thriller ended like a melodrama with unbelievable touch.
#MoviestoLearn
--------------------------
ஒரு படத்தில் வந்த கேரக்டர், அந்தப் படத்தின் இரண்டாம்பாகத்தில் தொடர்வது வழக்கமான விஷயம் தான். ஆனால் தமிழ் சினிமாவில் புதிய ட்ரெண்ட் ஒன்று ஆரம்பித்திருப்பது போல் தெரிகிறது.
வை ராஜா வை படத்தில் புதுப்பேட்டை தனுஷ்...
மாஸ் படத்தில் எங்கேயும் எப்போதும் ஜெய்..
இன்று நேற்று நாளை படத்திலும் நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படத்திற்கு லின்க் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
உண்மையில் சுவாரஸ்யமான மற்றும் புத்திசாலித்தனமான உத்தி இது. அதிலும் வை ராஜா வை படத்தில் கலக்கியிருந்தார்கள். படம் முழுக்கவே குமார் என்ற கேரக்டரைப் பற்றிப் பேசிக்கொள்கிறார்கள். கிளைமாக்ஸில் தான் தெரிகிறது, அது கொக்கி குமார் என!
படம் மொக்கையாக நகரும்போது, இப்படி ஒரு கேரக்டர் வந்தால் செமயாக இருக்கிறது. தமிழில் இதற்கு முன் இப்படி படங்கள் வந்திருக்கின்றனவா?
---------------------
'கௌதமியை இந்த ஓட்டு ஓட்டுறீங்களே..அவர் எவ்வளவு தைரியமான பெண்மணி தெரியுமா?' என்று என் மதிப்பிற்குரிய நண்பர் ஒருவர் இன்பாக்ஸில் வந்து புலம்பினார். 'நான் ஒரு கௌதமி ரசிகன்'என்று வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு ஓட்டித்தள்ளியிருக்கிறோம் என்பது தெளிவாகப் புரிந்தது. அவருக்கு கொடுத்த விளக்கம் இங்கே:
1990களில் பாலகுமாரனிடம் 'மேக்கப் இல்லாமலும் அழகாக இருக்கும் நடிகை யார்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் 'நான் பார்த்த நடிகைகளில் கௌதமி மட்டும் தான் மேக்கப் இல்லாமலும் அழகாக, கௌதமியகவே இருப்பார்'.
கதாநாயகிகளை அழகாகக் காட்டுவதில் வல்லவரான, 'ரிதம்' பட இயக்குநர் வசந்த் அவர்களின் இயக்கத்தில் வந்த 'நி..நி..நிவேதா' பாடல், பாலகுமாரன் சொன்னதற்கு இன்னொரு உதாரணம். இருப்பினும், இப்போது பெரும்பாலான விமர்சகர்கள் அவரைக் கழுவி ஊற்றுவது ஏன்?
த்ரிஷ்யம் படத்தின் ஹீரோயின் கேரக்டர், ஒரு முழுமையான அம்மா கேரக்டர் அல்ல. சின்னத்தம்பி மனோரமா போலவோ, வி.ஐ.பி.சரண்யா போலவோ மாசு மருவற்ற, மதிப்புக்குரிய அம்மா கேரக்டர் அல்ல அது.ஆடியன்ஸைக் கவரும், தியேட்டருக்கு ஆடியன்ஸை வரவைக்கும் சராசரி ஹீரோயின் கேரக்டரும் அம்மா கேரக்டரும் கலந்த கலவை அது.
தங்கப்பதக்கம் போன்ற படங்களில் கே.ஆர்.விஜயா அனாயசமாக இந்தக் கேரக்டரை செய்திருப்பார். ஒரே நேரத்தில் 'பருவப்பெண்ணாகவும்'(நல்லநேரம் டயலாக்!), அம்மாவாகவும் நடிக்கும்படி அழகும், நடிப்புத்திறமையும் பெற்ற நடிகை அவர். ஆனால் அவரே 1980களில் வெறும் அம்மாவாகவோ வேப்பிலை அம்மனாகவோ வந்தாரே ஒழிய, 'பழைய நினைப்புடா பேராண்டி' என ரொமான்டிக் காட்சிகளில் வரவில்லை.
இன்றைக்கு கொண்டாடப்படும் மீனா, இன்னும் பத்து (!) வருடங்கள் கழித்து, இதே கேரக்டரில் நடித்தால் கௌதமிக்கு கிடைத்த வரவேற்பு தான் அவருக்கு கிடைக்கும். த்ரிஷ்யம் திரைக்கதை எழுதும்போது, ஒருநாள் இந்த கேரக்டரில் கௌதமி நடிப்பார் என்று ஜீத்து ஜோசப் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். நீங்கள் ஒரு சேடிஸ்ட்டாக இருந்தால், 'கௌதமி தான் ஹீரோயின்' என கமல் சொன்னதும் ஜீத்து ஜோசப் முகம் எப்படிப் போயிருக்கும் என்று கற்பனை செய்து பார்த்துக்கொள்ளவும்.
எனவே மனோரமா, சரண்யா போன்று ஒரு முழுமையான அம்மா கேரக்டரில் அவர் நடித்தால், எமது முழு ஆதரவு அவருக்கு உண்டு. பாபநாசத்திலேயே அம்மா போர்சனை சிறப்பாகச் செய்திருந்தார். மீனாவிற்குக்கூட அது சரியாக வரவில்லை. அம்மா கேரக்டரில் நடிக்க, ஆட்கள் கிடைக்காத இந்த சூழலில், கௌதமியின் வரவு வரப்பிரசாதமாக அமையும். கட்டிலில் உருண்டு, புரண்டு ரொமான்ஸ் செய்யும் காலம் முடிந்தது என்று புரிந்தால், நலம்.
தனிப்பட்ட வாழ்க்கையில் பல தோல்விகளுடன், கேன்சரில் இருந்தும் மீண்ட கௌதமி என்ற தனி மனுஷி மீது எமக்கு பெரும் மரியாதை உண்டு. அதை முன்பே கீழே உள்ள பதிவில் சொல்லியிருக்கிறேன். #பாபநாசம்.
------------------------------
//ஓய்வெடுக்க கொடநாட்டுக்கு கிளம்புகிறார் முதல்வர் - செய்தி//
நாலுநாள், டெய்லி பத்து நிமிசம் ரிமோட் அமுக்குனதுக்கு ரெஸ்ட்டா?...என்னய்யா இது புதுசா இருக்கு!!!!!!
-------------------------------
0 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.