Thursday, March 17, 2016

ஃபேஸ்புக்கில் யோசிச்சேன்...9



ஒரு கோடம்பாக்க பட்சி சொன்ன கிசுகிசு..
' வெள்ளைக்காரனே விருது கொடுத்துட்டான்' என்று ஒரு நியூஸ் இந்த வாரம் சுற்றுகிறது. என்னடா விருதுன்னு பார்த்தால், இன்டிபென்டன்ட் ஃபிலிம் ஃபெஸ்டிவல்ல கலந்துக்கிட்டு விருது வாங்குச்சாம். இன்டீ..பென்டீக்கெல்லாம் அர்த்தம் தெரியுமோ?
பெரிய சினிமாப்பட நிறுவனம் தயாரிக்காமல், புதுசா படம் எடுக்க வர்ற அப்பாவி சவலைப்பிள்ளைகள் சட்டிபொட்டியெல்லாம் அடகு வச்சு எடுக்கிற படம் தான் இன்டீ..அவங்ககூடப் போய் ஒரு பெரிய ஜாம்பவான் படம் மோதினால், கப்பு யாருக்குய்யா கொடுக்கணும்?

அதுவும் கேஸ் சிலின்டர் மாதிரி மாசா மாசம் விருது கொடுக்கிற ஆளுங்க அவங்க. அதுக்கு உங்க படத்தை அனுப்ப, காசு. அந்த நிகழ்ச்சியில் நீங்க, அதாவது டைரடக்கரு, ஆக்குட்டருன்னு யார் கலந்துக்கணும்னாலும் 20 டாலருக்கு டிக்கெட் வாங்கித்தான் உள்ளே போகணும். எல்லாத்துக்கும் மேல, பரிசு கிடைச்சுடிச்சுன்னு தான் சொல்லுவாங்களாம். அந்த ஜெயிச்ச கப்பு வேணுமின்னா, 300 டாலர் சுளையா எடுத்து வைக்கணும். பச்சப்புள்ளைகளை அடிச்சு ஜெயிச்சதோட இல்லாமல், கப்பைக்கூட காசுகட்டி வாங்கிட்டு என்னய்யா பெருமை?

அந்த மகராசனுக்கு இருக்கிற திறமைக்கும், இதுவரை வாங்கிய விருதுக்கும் இந்த காமாசோமா விருது தேவையே இல்லையே? நியாயத்துக்கு, இவர் அங்கே ஜட்ஜால்ல போகணும்? இப்படியெல்லாம் பெரியவா இறங்கலாமா?
இப்போ ரிலீஸான படம், வாங்குனவங்க டவுசரை கிழிச்சிடுச்சிடுச்சாமே? அந்த ஓட்டையை மறைக்கத் தான் இந்த நியூஸுன்னு கோடம்பாக்கத்துல சொல்றாங்களே, அப்படியும் இருக்குமோ?
----------
இன்னைக்கு மழை வரும்ன்னு ரமணன் சார் சொன்ன அப்புறமும் இந்த மழை வருதுன்னா, அந்த மழைக்கு எவ்ளோ கொழுப்பு இருக்கணும்?
----------
வேதாளம் கிளைமாக்ஸுக்கு பத்து நிமிடம் முன்பு, ஸ்ருதி அஜித்தை ஒன்சைடாக லவ் பண்ண ஆரம்பிக்கிறார். அதனால் அஜித்துக்கு ஜோடி ஸ்ருதின்னு ஊரெல்லாம் சொல்றாங்க.
படம் முழுக்க, ஸ்ருதியை சுவாமிநாதன் ஒன் சைடாக லவ் பண்ணுகிறார். ஆனால் ஒருத்தரும் ஸ்ருதிக்கு ஜோடி சுவாமிநாதன்னு சொல்லவில்லை!
இதான் சார் உலகம்!!!!!

-------------
இணைய விமர்சனங்களில் உண்மை என்பது கீழே உள்ளவற்றில் ஏதோவொன்றில் ஒளிந்திருக்கிறது :
- அந்த நடிகர்/இயக்குநரின் ரசிகன் நான்...
- அந்த நடிகரின் முந்தைய படத்தை விட இது பெட்டர்
- அந்த படத்துடன் வெளியாகியிருக்கும் இன்னொரு படத்தை விட இது பெட்டர்
- அந்த ஜெனரில் இப்போதைக்கு இப்படி ஒரு படம் வரவில்லை
- அந்த நடிகரின் எதிரியின் முந்தைய படத்தை விட இது பெட்டர்
- அந்த படத்துடன் வெளியாகியிருக்கும் இன்னொரு படத்தின் ஹீரோவை எனக்குப் பிடிக்காது. எனவே இதை புரமோட் பண்றேன்
- அந்த நடிகர்/இயக்குநருக்கு இம்புட்டுத் தான் சரக்கு. சோ, ரொம்ப நான் எதிர்பார்க்கலை.
- அந்த படம் சம்பந்தப்பட்ட யாரோ ஒருவரால், எனக்கு ஏதோ காரியம் ஆகவேண்டியிருக்கிறது.
- நான் பார்த்த ஹாலிவுட்/உலகப்படம் மாதிரியே இருக்கிறதே!!
- படம் உண்மையிலேயே நன்றாக இருக்கிறது.
But, மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்பது தான் அல்டிமேட் உண்மை.
(படம் பிடிக்காமல் போக, மேலே சொன்னவற்றை உல்டா செய்து படிக்கவும்!)
------------
எப்போதெல்லாம் தீபாவளி வருகிறதோ,அப்போதெல்லாம் பட்டாசு வெடித்து காசை கரியாக்காதீர்கள் எனும் அறிவுரை கிளம்பிவிடுகிறது. கொஞ்சம் சிந்தித்தால்கூட, இதில் உள்ள அபத்தம் புரியும்.
ஒரு பட்டாசு என்பது ஏழைத்தொழிளார்களால் உருவாக்கப்பட்டு, முதலாளி & வியாபாரிகள் கைக்கு வந்து, பிறகு நம்மிடம் வந்து சேர்கிறது. எனவே பட்டாசுக்கு கொடுக்கும் நாம் கொடுக்கின்ற காசு, வியாபாரி-முதலாளி-தொழிலாளி ஆகியோருக்குத் தான் திரும்பச் சென்று சேர்கிறது. இதில் காசைக் கரியாக்குவது எங்கேயிருந்து வருகிறது?
ஒரு நூறு ரூபாய் தாளை எடுத்து, தீ வைத்து கொளுத்தி குதூகலிப்பது தான் காசை கரியாக்குவது. யாருக்கும் பிரயோஜனம் இல்லாமல், காசு கரியாகிவிட்டதே எனலாம். தமிழில் 'காசைக் கரியாக்காதே' எனும் சொலவடை இருப்பதால், அதை உடனே தீபாவளிப் பட்டாசுடன் இணைத்து சிந்திக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அதற்கு அர்த்தம், காரணமின்றியும் யாருக்கும் பிரயோஜம் இல்லாமலும் செலவளிக்காதே என்பது தான்.
பட்டாசுக்கு நாம் கொடுக்கும் பணம், அது தரும் சந்தோசத்திற்காகத் தான். காசு கொடுத்து பட்டாசு வாங்குகிறீர்கள். பட்டாசு வெடிக்கிறீர்கள். நம் மனது அந்த சந்தோசத்தை எடுத்துக்கொள்கிறது. பிறகு, பட்டாசு கரியாகிறது.
ஒரு ஹோட்டலுக்குப் போய் காசு கொடுக்கிறீர்கள். மீல்ஸை சாப்பிடுகிறீர்கள். நம் உடல், தேவையான சத்துக்களை எடுத்துக்கொள்கிறது, மறுநாள் கழிவு கக்கூஸிற்குப் போகிறது.
எனவே 'காசை ஏன் கக்கூஸில் கொட்டுகிறீர்கள்?' என்று கேட்கலாமா? கேட்டால், சாப்பிடாமல் பட்டினி கிடப்பீர்களா?
தீபாவளி பட்டாசு விற்பனையும் போனஸும் அந்த பட்டாசுத் தொழிலாளர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்றாவது தெரியுமா? வாழ்க்கையில் ஒருநாளாவது பட்டாசுத் தொழிற்சாலைகள் பக்கம் போயிருக்கிறீர்களா? பட்டாசுத் தொழிலில் மிகப்பெரிய விற்பனை நேரமே, இது தான். அதிலும் அறிவுஜீவிவாதம் வைத்து மண்ணைப் போடாதீர்கள்.
சந்தோசமாக பட்டாசு வெடித்து, தீபாவளியைக் கொண்டாடுங்கள். அதன்மூலமாக சிறுதொழில் புரியும் பட்டாசு ஆலைகளையும் பட்டாசுத் தொழிலாளர்களையும் வாழ வைக்கிறீர்கள் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.
எனவே.....தீபாவளிக் கொண்டாட்டத்தை ஆரம்பிப்போம்!

-----------------
தெருவில் சிறுசலசலப்பு கேட்டாலும்நமக்கெதற்கு வம்பு?’ என தன் பிள்ளைகளை வீட்டிற்குள் அடைத்துவைக்கும் தாய்மார்கள் தான் இங்கே அதிகம். ஆனால் தான் மட்டுமல்லாமல் தன் பிள்ளைகளையும் போராட்ட உணர்வுடன் வளர்த்தவர் வைகோவின் தாயார் மாரியம்மாள்.
எந்த நேரத்திலும் அந்த வீட்டின் கதவை உதவிக்காக தட்டலாம் என்று வாழ்ந்த பெண்மணி அவர். மார்க்ஸிம் கார்க்கியின்தாய்’- விடவும் ஒருபடி மேலானவர் என்பேன்.
ஆன்லைனில் ஆளும்கட்சிக்கு எதிராக கமெண்ட் போடவே பலரும் அஞ்சும் சூழலில், கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடைக்கு எதிராக அவர் பொங்கி எழுந்த வீரத்தை மறக்க முடியாது.
ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு மறைந்திருக்கும் அம்மாவிற்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்!

--------------
கமல் Vs அஜித் - தீபாவளி
இந்த தீபாவளிக்கு தூங்காவனமும் வேதாளமும் களமிறங்குகின்றன.
தூங்காவனம் ஒரு ஃப்ரெஞ்ச் படத்தின் ரீமேக். தான் வசூல்ராஜாவாக நீடிக்க, ரீமேக் ராஜா ஆவது தான் வழியென்று கமல் இறங்கிவிட்டதில் நமக்கு வருத்தம் தான். ஆனாலும், அட்டகாசமான த்ரில்லர் படம் அது. ஒரே இரவில் நடக்கும் அதிரடி சம்பவங்கள் தான் படம். ’அறிவுஜீவித்தனம்கலக்காமல், ஒரிஜினலை அப்படியே எடுத்திருந்தால், கமலுக்கு அது இன்னொரு ஹிட்டாக அமையும். அவரது வயதிற்கும், நடிப்பிற்கும் பொருத்தமான கதை. த்ரிஷா என்று அழைக்கப்படும் கமலா காமேஷிற்கும் செமயான கேரக்டர். பிரகாஷ்ராஜ் வேறு இணைந்திருக்கிறார். எனவே, நான் அதிகம் எதிர்பார்க்கும் படமாக தூங்காவனம் ஆகிறது.
வேதாளம்...’கம்பெனி ஆர்டிஸ்ட்மாதிரி அஜித்தின்கம்பெனி இயக்குநர்களில் ஒருவரான சிவாவின் இயக்கத்தில் வருகிறது படம். ராஜ மௌலியின் படத்தை ரீமேக் செய்து சிறுத்தையாக சீறினார் சிவா. அடுத்து வீரம், சிறுத்தை அளவிற்கு இல்லையென்றாலும் நல்ல ஃபேமிலி எண்டர்டெய்னர் & ஆக்சன் படமாக இருந்தது.
இதுவரை தமிழில் ஹிட் கொடுக்க முடியாமல் தத்தளிக்கும் ஸ்ருதி ஹாசன், இதிலாவது வெற்றிக்கனியைப் பறிப்பாரா என்று பார்க்கலாம். அதிர்ஷ்ட தேவதை லட்சுமி மேனன் இருப்பதால், பெரிய சேதாரம் இருக்காது என்று நம்புகிறேன். இதுவரை வெளியான ரெட் கெட்டப், ட்ரெய்லர், பாடல்கள், புலி கொடுத்த வேதாள கிலி எல்லாம் சேர்ந்து, படத்தின்மீது பெரிய நம்பிக்கையை உண்டாக்கவில்லை என்பதே யதார்த்தம். ஆனாலும் அஜித் எனும் மேஜிக் தான் வேதாளத்தின் ஒரே அட்ராக்சன்.
கமலா? ஸ்ருதியா? எனும் போட்டி தான் இந்த தீபாவளியில் ஸ்பெஷல்!!

---------------
பெரும் ஆபத்தில் சிக்கியிருக்கிறேன்.
என் பையனுக்கு பிடித்த படம், அவன் கையில் சிக்கிவிட்டால் எங்கள் வீட்டில் அது குறைந்தது 50 தடவையாவது ஓடும்.
ஹோம் அலோன், டாய் ஸ்டோரி, காக்கா முட்டை என பல படங்களை அப்படிப் பார்த்தாகிவிட்டது. ஏதோ நல்ல படங்கள் என்பதால், ஓரளவு சமாளித்துவிட்டேன்.
இப்போது புலியும் நானும் அவன் கையில் சிக்கிவிட்டோம். சீக்கிரமே ரணகளமான 100வது ஷோ ஓடும் என்று நினைக்கிறேன்.
எப்படியெல்லாம் ஒரு மனுசனுக்கு சோதனை வருது!!
---------------
காக்கா முட்டை படத்தில் பழைய இரும்புப் பொருட்களை வாங்கும் காயலான் கடைக்காரர் ஒருவர் வருவார். ஆரம்பத்தில் அவர் கடையில் இருப்பார், அவர் மனைவி வீட்டில் இருப்பார். பிறகு நண்பர்களின் சகவாசத்தால், குடிப்பழக்கம் ஏற்படும். அடுத்த காட்சியில் அவர் மனைவியும் கடையில் இருப்பார். கடைக்காரர் பிறகு முழு குடிகாரராக ஆகியிருப்பார். அப்போது அவர் மனைவி மட்டுமே கடையைப் பார்த்துக்கொள்வார், கணவர் கடையோரத்தில் மப்பில் விழுந்துகிடப்பார்.
குடியினால் ஒரு குடும்பம் எப்படி நாசமாகிறது, குடும்பத்தில் உள்ளோர் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்று அருமையாகச் சொன்ன படம் காக்கா முட்டை. ஆனால் எங்கேயும்பாவி, குடிச்சுக் குடிச்சு நாசமாப் போறியேஎனும் வசனம் ஏதும் இருக்காது. எல்லாமே விஷுவலாகச் சொல்லப்பட்டிருக்கும். எனவே தான் அதுவொரு நல்ல படமாகவும், தேசவிரோத குற்றத்திற்கு ஆளாகாத படமாகவும் ஆனது.
ஓகே.ஓகே இயக்குநரின் அனைத்துப் படங்களும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்தமான் கராத்தேபடமும், தேசபக்தியை சிறப்பாக ஊத்திக்கொடுத்த படங்கள் என்று சொல்லலாம்.
அதிலும்டோண்ட் க்ளோஸ் டாஸ்மாக் அம்மா...அட்லீஸ்ட் ஓப்பன் தி பேக் டோர் அம்மாஎனும் பாடல், தேசியகீதத்திற்கு ஒப்பானது. அதைக் கேட்ட அனைத்து அம்மாக்களின் மனதும் குளிர்ந்திருக்கும் என்பதை படத்திற்குக் கிடைத்த அரசு வரிவிலக்கில் இருந்தே அறியலாம்.
சிட்டிசன் என்பதைகுடிமகன்என்று தான் முன்னோர்கள் மொழிபெயர்த்திருக்கிறார்கள். எனவேகுடிமகன்களுக்கு எதிரான எந்தவொரு விஷயங்களும் இந்நாட்டு சிட்டிசன்களுக்கும் இந்நாட்டிற்கும் எதிரி என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
எனவேமூ* டாஸ்மாக்கை மூ*’ என்று பாடுவது கடும் தேசத்துரோகச் செயல் என்பது உங்களுக்கு இந்நேரம் புரிந்திருக்கும். படைப்பாளிகளும் போராளிகளும் இனிமேலாவது விவரமாக, தேசபக்தியுடன் நடந்துகொள்ளவும்!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.