Thursday, November 12, 2015

வேதாளம் - திரை விமர்சனம்

 20 வருடங்களுக்கு முன்பு ஒரு படம் வந்தது. அடித்தட்டு ரசிகன் முதல் அனைவரையும் அசர வைக்கும் ஒரு திரைக்கதை அமைப்புடன் அந்தப் படம் வெளியானது. ஒரு ஆக்சன் ஹீரோ..ஆனால் அவர் அப்பாவியாக வருவார். என்ன பிரச்சினை வந்தாலும், சண்டை வேண்டாம் என்று ஒதுங்கிப் போவார். ‘திருப்பி அடி தலைவா!’ என்று ரசிகன் தியேட்டரில் கதறினாலும், ரத்தம் ஒழுக அடிவாங்கியபடியே சிரிப்பார் ஹீரோ. அதன்பிறகு அந்த கோல்டன் மொமெண்ட் வரும்..மாணிக்கம் பாட்ஷாவாக மாறும் அந்த கணம், பார்ப்பவர் உடல் சிலிர்க்கும்! இன்றளவும் டிவியில் ஓடினால், சேனல் மாற்ற முடியாத வசீகரமான படம், பாட்ஷா.

மற்ற ஆக்சன் ஹீரோக்களுக்கும், ஆக்சன் ஹீரோ ஆக ஆசைப்பட்டோருக்கும் பாட்ஷா ஒரு ட்ரெண்ட் செட்டர் ஆனது. சரத்குமார் முதல் விஷால் வரை, பலரும் பாட்ஷா அவதாரம் எடுத்து, தன் ஆசையைத் தீர்த்துக்கொண்டார்கள். பாட்ஷா ஃபார்மேட்டில் வந்த பல படங்கள் வெற்றிபெற்றன. கமல்கூட பாட்ஷாவாக விஸ்வரூபம் எடுத்தார். ஒவ்வொரு ரசிகனுக்கும் தன் ஹீரோவை பாட்ஷாவாக பார்க்க ஆசை உண்டு. அந்த கோல்டன் மொமெண்டில், தன் ஹீரோ எப்படி விஸ்வரூபம் எடுப்பார் என்று ரசிக்க ஆசை உண்டு. அஜித் ரசிகர்களுக்கு அப்படி ஒரு படம், வேதாளம்.

பாட்ஷாவாக சரத்குமார் மாறிய ‘ஏய்’ படத்தின் கதை தான் வேதாளத்தின் கதையும். கதையும் திரைக்கதை அமைப்பும் ஏய் படத்தின் உருவல் தான். ஆனாலும் கணேஷ் வேதாளமாக மாறும் தருணத்தில், தியேட்டரில் தீப்பொறி பறக்கிறது. ரசிகர்கள் கொண்டாடித்தீர்க்கிறார்கள். ‘தெறிக்க விடலாமா?’என்று அஜித் பாட்ஷாவாக மாறும் இடம், அதகளம். தொடர்ந்து இண்டர்வெல் ப்ளாக், லட்சுமி மேனன் அஜித்தை வரையும் சீன், சிக்னல் சீன் என ரசிகர்கள் கொண்டாட ஏகப்பட்ட விஷயங்களை படத்தில் வைத்திருக்கிறார்கள். ரசிகர்களின் நீண்ட நாள் ஏக்கம், தன் ஹீரோவை பாட்ஷாவாக பார்த்ததில் தீர்ந்திருக்கும். லட்சுமி மேனனும் வழக்கம்போல் நடிப்பில் பின்னுகிறார்.

கொஞ்ச வருடங்களாகவே அஜித் ஏனோதானோவென்று தான் ஸ்க்ரீனில் வந்துகொண்டிருந்தார். நடிப்பதை விட்டுவிட்டு, நடப்பதை மட்டுமே செய்துவந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஆக்டிவ்வான அஜித்தை இதில் பார்க்க முடிகிறது. முகத்தில் நல்ல எக்ஸ்பிரசனுடன், கோபத்தையும் பாசத்தையும் அப்பாவித்தனத்தையும் அப்படியே கொண்டுவந்திருக்கிறார். பழைய காதல் மன்னன்/அமர்க்களம் காலத்து அஜித்தை மீண்டும் பார்க்க முடிந்ததில் சந்தோசமே!

படத்தின் முதல் சீனில் இருந்து, கடைசி சீன்வரை அஜித், அஜித், அஜித் தான். நிச்சயம், அஜித் ரசிகர்களுக்கு இந்தப் படம் திருப்தி கொடுக்கும். ஆனால் மற்றவர்களுக்கு...?

சிறுத்தை சிவா ஒரு அருமையான தெலுங்குப்பட டைரக்டர் என்று இதிலும் நிரூபித்திருக்கிறார். மசாலாவில் கவர்ச்சி மட்டும் தான் மிஸ்ஸிங், மீதி எல்லாமே திகட்டத் திகட்ட கொட்டியிருக்கிறார். வீரம் முடித்தவுடன், அஜித் அழைத்து அடுத்த படம் செய்வோம் என்றதும் கதை கையில் இல்லாமல் இருந்திருக்கலாம். அதற்காக ‘ஏய்’ படத்தை உருவது கொஞ்சம் ஓவர் பாஸ்.

இன்னும் அரதப்பழசான கதை, ஐம்பது பேர் வந்தாலும் அடிக்கும் ஹீரோ, எத்தனை துப்பாக்கி இருந்தாலும் ஹீரோமேல் ஒரு குண்டுகூட பாயாத அதிசயம் எல்லாம் சேர்ந்து, படம் பார்ப்பவர்களை தெறிக்க விடுகின்றன. சூரியின் மோசமான காமெடி போர்சன் என்று இந்த படத்தைச் சொல்லலாம். கூடவே, லக்கி கேர்ள் ஸ்ருதி வேறு காமெடி என்ற பெயரில் உயிரை எடுக்கிறார்.’மாணிக்கம்’ கணேஷை விட, ‘பாட்ஷா’ வேதாளம் கலக்க வேண்டும். ஆனால் இங்கே வேதாளம் காமெடி ஹீரோவாக வருவது பெரும் மைனஸ்!


தியேட்டரில் உட்கார முடியாத அளவுக்கு மொக்கையான படம் இல்லை. கிளைமாக்ஸ்வரைக்குமே அவ்வப்போது ரசிக்கும்படி சில விஷயங்கள் வந்துகொண்டே தான் இருக்கின்றன.ஆனால் இரண்டாம்பாதி முழுக்க இப்படித்தான் சீன் வரும் என்று யூகித்துவிட முடிகிறது. இன்னும் வலுவான கதையுடன், இதே தெறி மாஸ் உடன் இறங்கியிருந்தால் எல்லாத்தரப்பையும் கவர்ந்திருக்கலாம்.

தெலுங்கு மசாலாப் பட ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் பார்க்க வேண்டிய படம். அதற்கு மேல் சொல்ல, ஒன்றும் இல்லை!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.