Wednesday, November 18, 2015

திரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 63

63. சீன் டெவலப் ஆகும் நேரம்

ஒரு சீன் டெவலப் செய்யும் முன்பும் & எழுதும் முன்பும், ஒரு சீனில் இருக்க வேண்டிய அம்சங்கள் என்ன என்று நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அவற்றைப் பற்றி, விரிவாகப் பார்ப்போம்.
1. இடம் : இந்த சீன், எங்கே நடக்கிறது? வீட்டில் நடக்கிறதா அல்லது ஆபீஸிலா? லாஜிக்கலாகவும், பிராக்டிகலாகவும் யோசித்து, இடத்தை முடிவு செய்யுங்கள். வீட்டின் உட்புறமா, வெளிப்புறமா என்றும்
யோசித்துக்கொள்ளுங்கள்.

2. நேரம்: இந்த சீன் இரவில் நடக்கிறதா அல்லது பகலிலா? மிகவும் தேவைப்பட்டால் மட்டுமே நேரத்தை துல்லியமாக குறிப்பிடுங்கள். அல்லது, இரவா பகலா என்று சொன்னால் போதும். அதிகாலை, நள்ளிரவு, இரவு 2
மணி என்று குறிப்ப்ட வேண்டும்.

3. கதாபாத்திரங்கள்: யாரெல்லாம் இந்த சீனில் இருக்கப் போகிறார்கள்? முந்தைய சீனின் தொடர்ச்சி அல்லது புதிய சீன் என்பதைப் பொறுத்து இது அமையும்.

4. ஆக்சன்: என்ன நடக்கிறது இந்த சீனில்? 'ஹீரோ ஹீரோயினைப் பார்க்கிறான். காதலில் விழுகிறான்' என்றோ அல்லது 'ஹீரோ வில்லனுடன் ஃபோனில் பேசுகிறான்' என்றோ இது இருக்கலாம். சீன் போர்டில் ஒன்லைன் எழுதும்போதே, முழு சீனும் உருவாகிவிடலாம். அல்லது வெறுமனே மேலே சொன்னது போல் பொதுவாக இருக்கலாம். என்ன இருக்கிறதோ, அதை குறித்து வைக்கவும்.

5. வசனங்கள்: சில சீன்களை யோசிக்கும்போதே, அட்டகாசமான வசனம் ஏதாவது சிக்கிவிடலாம். அதை இங்கே குறித்து வைக்கவும். உதாரணம், 'ஐ ஆம் வெயிட்டிங்'.

6. உணர்வுகள் (+/- Emotion) : ஒரு சீன் சந்தோசமாக ஆரம்பித்து, சந்தோசமாகவே முடியலாம். அல்லது பெரும் சண்டையாகவோ சோகமாகவோ முடியலாம். ஒரு மாற்றமும் இல்லாமல், சந்தோசம் டூ சந்தோசம் என்று முடிந்தால், அந்த சீன் சுமாராக இருக்க வாய்ப்பு அதிகம். ஒரு சீனின் மூடு அல்லது ஒரு கதாபாத்திரத்தின் மனநிலை எப்படி மாறுகிறது இந்த சீனில் என்று குறிக்க, உதவுவது +/- பகுதி.

மேலே உள்ள துப்பாக்கி சீனில், நம்பிக்கை டூ ஏமாற்றம் நடப்பதைக் கவனியுங்கள். இரு குடும்பத்திலும் வில்லன்கள் என்று யாரும் இல்லை. ஹீரோ ஹீரோயினைப் பெண் பார்க்கப் போகிறான். இருகுடும்பத்து ஆட்களும் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். 'ஹீரோ பெண் பார்த்தான், இருவருக்கும் பிடித்திருந்தது' என்பது சாதாரண சீன். இப்படித்தான் நடக்கும் என்று சீனின் ஆரம்பத்தில் ஆடியன்ஸ் நடப்பதை எவ்வளவு தூரம் லாஜிக்கலாக உடைக்கிறோமோ, அவ்வளவு தூரம் நமக்கு நல்லது.

7. முரண்பாடு (Conflict): மேலே சொன்ன எமோசன் சேஞ்சுக்கு உதவும் விஷயம், இந்த கான்ஃப்ளிக்ட் எனப்படும் முரண்பாடு. ஏதோ ஒரு சிக்கல் அல்லது இரு கேரக்டர்களுக்கு இடையே முரண்பாடு இருந்தால், அந்த சீன் சுவார்ஸ்யம் ஆகிவிடும். பொதுவாகவே முதல்முறை சீன் யோசிக்கும்போது 'அம்மா மெஸ் போனான்..இட்லி வாங்கிச் சாப்பிட்டான். கையைக் கழுவினான்' எனும் ரேஞ்சில் தான் யோசனை போகும். இதில் என்ன முரண்பாடு இருக்கிறது? முரண்பாடு இல்லையென்றால் சுவாரஸ்யம் இல்லை. 'அம்மா மெஸ் போனான், திமுக கவுன்சிலரை அங்கே பார்த்தான்' என்றாவது ஒரு பிட்டைச் சேருங்கள். 

முரண்பாடு என்பது இரு கேரக்டர்களுக்கு இடையிலான மோதல் மட்டுமல்ல. அந்த சீனில் நடக்க வேண்டிய சம்பவம்/ஆக்சனுக்கு வரும் தடைகளும் கூட முரண்பாட்டில் வரும். 

துப்பாக்கி சீனில், எல்லாமே ஸ்மூத்தாக போகிறது. அடக்க ஒடுக்கமான, அழகான பெண். ஹீரோ காதலில் விழப்போகிறான் என்று நினைக்கும்போது, ஹீரோ அவளை வேண்டாம் என்று சொல்கிறான். தனக்கு தைரியமான பெண் தான் வேண்டும் என்கிறான். 'எதிர்பார்த்த மாதிரியே படம் செல்கிறது' எனும் விமர்சனத்தை உடைக்கும் விஷயம், இந்த முரண்பாடு.

8. குறிக்கோள்: ஒரு கதையில் ஹீரோவுக்கு குறிக்கோள் எந்த அளவிற்கு அவசியம் என்று பார்த்திருக்கிறோம். அதே போன்ற முக்கியமான விஷயம், காட்சியின் குறிக்கோள். 'இந்த சீனின் நோக்கம் என்ன? கதையைப் பொறுத்தவரை, இந்த சீன் எதற்காக? கதையை நகர்த்த, எந்த அளவிற்கு இந்த சீன் உதவுகிறது? திரைக்கதை என்பதே, ஒரு கதையை சிறுசிறு தவல்களாக சொல்வது தானே? அப்படி என்ன தகவல் இங்கே சொல்லப்படுகிறது?' போன்ற கேள்விகளை எழுப்புங்கள்.

'ஹீரோ ஒரு தைரியசாலி. தன் வாழ்க்கைத்துணையும் அப்படி வரவேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு மாறுபட்ட சிந்தனை கொண்டவன்' என்பது தான் அந்த துப்பாக்கி சீன் சொல்லும் தகவல். கூடவே, ஹீரோ-ஹீரோயின் ஊடலையும் ஆடியன்ஸ் எதிர்ப்பார்க்க வைக்கும் சீனாக இது ஆகிறது. படத்தில் கஜால் அகர்வால் தான் ஹீரோயின் என்று தியேட்டருக்குள் வரும் முன்பே, ஆடியன்ஸிற்குத் தெரியும். எனவே ஹீரோ, ஹீரோயினை வேண்டாம் என்று சொன்னால், எப்படி இருவரும் சேரப்போகிறார்கள் எனும் ஆர்வம் ஆடியன்ஸ் மனதில் உண்டாகும்.

ஒவ்வொரு சீனையும் 'இந்த சீனை அழித்தால் என்ன ஆகும்?'என்று யோசித்துப் பாருங்கள். 'ஒன்றும் ஆகாது' என்று பதில் வந்தால், அது ரெட் அலர்ட்! எல்லா சீனுமே அர்த்தமுள்ளதாக இருக்க வாய்ப்புக் குறைவு. 

கமர்சியலுக்காக சில காட்சிகளை வைக்கவேண்டி வரலாம். அப்படிப்பட்ட சீன்களை, சீன் போர்டில் சிவப்புக் கலரில் ஹைலைட் செய்து வைக்கவும். எல்லா சீனும் இப்படி டெவலப் செய்தபிறகு, சீன் போர்டைப் பாருங்கள். ஏகப்பட்ட சிவப்பு சீன்கள் இருந்தால், ஆபத்தான நிலையில் உங்கள் திரைக்கதை இருக்கிறது என்று அர்த்தம். கதையை நகர்த்த திரைக்கதை எழுதாமல், சும்மா ஜல்லியடிக்கிறீர்கள் என்று அர்த்தம்.

நாம் இப்போது சீன்களை எழுதவில்லை. சீன்கள் எழுதுவதற்கான, குறிப்புகளை எழுதி வைக்கிறோம். இப்போது எட்டு சீன் போர்டுகளையும் பாருங்கள். ஒட்டுமொத்தமாக 50 அல்லது 60 சீன்கள் தேறியுள்ளதா என்று
பார்த்துக்கொள்ளுங்கள். இந்தக் கதையில் இவ்வளவு சீன்கள் தான் தேறும் என்ற நிலை வரும்வரை, தொடர்ந்து சீன் போர்டுகளை டெவலப் செய்யுங்கள்.

இவ்வாறு செய்யும்போது, 60க்கும் மேற்பட்ட சீன்களுக்கு ஐடியா தோன்றலாம். அப்போது, ரெட் கலரில் உள்ள சீன்களில் சிலவற்றை நீக்க முடியுமா என்று பாருங்கள். 60 சீன்கள் என்பது பொதுவான தேவை.  

ஒட்டுமொத்தத்தில் 100 முதல் 120 பக்கங்களுக்குள் திரைக்கதை முடியவேண்டும். காட்சிகளின் நீளத்தைப் பொறுத்து சீன்கள் & பக்கங்களின் எண்ணிக்கை மாறலாம்.

60 சீன்களுக்கான ஐடியா உடன், திரைக்கதைக்கு தயாராகிவிட்டீர்கள். இப்போது முதல் சீனில் இருந்து மறுபடியும் எல்லா சீனையும் கடைசிக்கட்ட சோதனைக்கு உட்படுத்துவோம். இருப்பினும், நீங்கள் விரும்பினால் இப்போதே திரைக்கதை எழுத ஆரம்பிக்கலாம். முதல் டிராஃப்ட் எழுதியபிறகு, கீழே உள்ள பகுதிக்கு நீங்கள் வரலாம்.

திரைக்கதையில் இருக்கும் பெரிய சவால், ஆடியன்ஸிற்கு புதுமையான சீன்களை அவர்கள் எதிர்பார்க்காத கோணத்தில் வழங்குவது. அதற்கு கீழே உள்ள விஷயங்களை மாற்றி எழுதலாமா என்று யோசியுங்கள்.

1. இடம்: முதல் யோசிப்பில் க்ளிஷேவாகவே இடம் அமையும். ஹீரோ-ஹீரோயின் பேசிக்கொள்கிறார்கள் என்றால் ஹோட்டல் அல்லது பீச் என்று தான் நமக்குத் தோன்றும். வேறு இடத்திற்கு மாற்றலாமா என்று
யோசியுங்கள். ஒருவனை ரவுடிகள் துரத்துகிறார்கள். ஹீரோ அறிமுகக் காட்சி. ஹீரோ அவர்களை அடித்துத் துரத்துகிறான். ரோட்டில் அல்லது மார்க்கெட்டில் வர வேண்டிய சீன் என்று தான் தோன்றும். சித்திரம்
பேசுதடியில், அதை டாய்லெட்டில் வைத்திருப்பார் மிஷ்கின்!

2. நேரம் : பகலில் நடப்பதை இரவாகவோ அல்லது இரவில் நடப்பதை பகலாகவோ ஆக்கமுடியுமா என்று பாருங்கள். வீட்டை விட்டு ஜோடிகள் ஓடுவது இரவாகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லை, காதல் படம்
போன்று பகலிலும் இருக்கலாம்.

3. கேரக்டர்கள்: காட்சிகளில் வரும் கேரக்டர்களின் இயல்பை அல்லது கேரக்டரையே மாற்ற முடியுமா என்று பாருங்கள். 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' படத்தில் வந்த அம்மா (ஊர்வசி) கேரக்டர் இதற்கு நல்ல
உதாரணம். இ & சி எஞ்சினியரிங், லேட்டஸ்ட் டெக்னாலஜி என்று அந்த அம்மா கேரக்டர் பிய்த்து உதறியதை அவ்வளவு சீக்கிரம் நாம் மறந்துவிட முடியாது. மிஷ்கின் படங்களிலும் 'பூக்காரம்மா, ரவுடியின் மகன்'
போன்ற கேரக்டர்கள் இதற்கு நல்ல உதாரணம்.

அந்த சூழ்நிலைக்குப் பொருந்தாத கேரக்டர்களை நுழைப்பதும் ஒருவகை ட்ரிக். 'சார்..லட்டூ' எனும் அரங்கேற்ற வேளை வசனம் பேசிய கேரக்டர் அதற்கு ஒரு உதாரணம்.

எல்லா சீனுக்குமே இவற்றை மாற்ற முடியாவிட்டாலும், எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் மாற்றுங்கள். லாஜிக் இல்லாமல், கதையோடு ஒட்டாமல் ஓவர் டோஸ் ஆகிவிடாமலும் பார்த்துக்கொள்ளுங்கள். '3'
படத்தில் தாலி கட்டும் இடத்தை 'பப்' என்று புதுமையாக வைத்திருப்பார்கள். அது பெரும் தவறாகப் போனது பற்றி ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.

அடுத்த பகுதியில், சீன் எழுதும் ஃபார்மேட் பற்றிப் பார்ப்போம்.
 
(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.