Monday, November 2, 2015

திரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 62

62. சீன் போர்டுடன் சீன் போடுங்கள்

ஒரு இடத்தில், ஒரு நேரத்தில் கதையை நகர்த்தியபடி நடக்கும் சுவாரஸ்யமான சம்பவமே சீன் ஆகும். (சில நேரங்களில் வெவ்வேறு இடங்களில் வருவதையும் சீன்கள் காட்டும்!)

உங்கள் ஒன்லைனை கதையாகப் பெருக்கி, பீட் ஷீட்டில் பொருத்தி, முடிவில் எட்டு சீகுவென்ஸாக பிரித்துவிட்டீர்கள். இது சீன் எழுதும் நேரம். சீன் எழுத அதாவது திரைக்கதை எழுத ஆரம்பிக்கும் முன் கடைசியாக, ஆமாம் பாஸ்..கடைசியாக, ஒரு விஷயத்தை செக் செய்துகொள்ளச் சொல்கிறார் ப்ளேக் ஸ்னிடர். அது...வேறென்ன, போதுமான சீன் கைவசம் இருக்கிறதா என்று தான்.

இதுவரை நீங்கள் செய்த வேலைகள், குறைந்தது 40 சீன்களுக்கான ஐடியாவை உங்களுக்குக் கொடுத்திருக்கும். அப்படி 40 சீன்களுக்கான ஐடியா இல்லாமல், திரைக்கதை எழுத ஆரம்பிக்க வேண்டாம். உங்களுக்குள் 60 சீன்கள் கொதித்துக்கொண்டிருந்தால், இந்த பகுதியை நீங்கள் ஸ்கிப் செய்துவிடலாம். இல்லையென்றால், நீங்கள் கையில் எடுக்க வேண்டிய ஆயுதம் தான், சீன் போர்டு.

பல ஆண்டுகளாக திரைக்கதை ஆசிரியர்கள் பயன்படுத்தி வரும் விஷயம், இந்த சீன் போர்டு. சிலர் 4"*4" சைஸில் சிறு அட்டையில் சீன்களை எழுதிவைப்பது உண்டு. பிறகு ஃப்ரீயாக இருக்கும்போது, அதை எடுத்துவைத்து யோசித்து சீன் டெவலப் செய்வார்கள். அதே அட்டைகளை வரிசையாக சுவரில் ஒட்டிவைத்தால், அது தான் சீன் போர்டு. ஆங்கிலப் படங்களில் சீரியல் கில்லர்கள் தான் தங்கியிருக்கும் இடம் முழுக்க, தான் கொல்லப்போகும் ஆட்களின் பெயரை ஒட்டிவைத்திருப்பான் இல்லையா? அதே டெக்னிக் தான் இது!

இப்போது டெக்னாலஜி டெவலப் ஆகி, உள்ளங்கக்குள் சுருங்கிவிட்டதால் சீன் போர்டையும் எலக்ட்ரானிக் சீன் போர்டு ஆக்குங்கள். கீழே உள்ள படங்களை தரவிறக்கிக்கொள்ளுங்கள் அல்லது இதே போன்று எக்ஸெல் ஷீட்டில் நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள். எட்டு சீக்குவென்ஸ்க்கும் எட்டு சீன் போர்டுகள்: (பெரிதாகப் பார்க்க, படங்களின் மேல் க்ளிக் செய்யவும்)


அதில் இதுவரை உங்கள் மனதில் உருவாகி வந்த சீன்களை, சிறுகுறிப்பாக எழுதுங்கள். ஒவ்வொரு போர்டின் கீழும், அந்த சீகுவென்ஸின் கோல் என்ன, ஆக்டிவிட்டி என்ன, கான்ஃப்ளிக் என்ன என்பதையும் எழுதிக்கொள்ளலாம்.

நீங்கள் திரைக்கதையாக என்ன எழுதப் போகிறீர்களோ, அதை மனதிற்குள் விஷுவலாக ஓட்டிப் பார்க்க உதவுவது, இந்த போர்டு. லாஜிக், குணச்சித்திரவளைவு, கேரக்டர் கன்டினியூட்டி, கதையின் போக்கு போன்றவற்றை சரிபார்த்துக்கொள்ள உதவுவது இந்த சீன் போர்டு. அவ்வப்போது தோன்றும் வசனங்கள், திடீரென ஒரு சீனில் புதிய கேரக்டரை நுழைப்பது போன்ற புதிய ஐடியாக்களை குறித்து வைத்துக்கொள்ள உதவும் சிறந்த டூல் இது.

ஒரு கதை அரைகுறையாக மனதில் உருவானதுமேகூட, சீன் போர்டில் குறித்து வைக்கலாம். பிறகு கதையும், காட்சிகளும் டெவலப் ஆக, ஆக இந்த போர்டை அப்டேட் பண்ணிக்கொண்டே வரலாம். பீட் ஷீட், சீகுவென்ஸ் ஷீட் மற்றும் திரைக்கதையின் ஃபர்ஸ்ட் ட்ராஃப்ட்களை எழுதும்போது வரும் புதிய ஐடியாக்களுக்கு ஏற்ப, சீன் போர்டையும் அப்டேட் செய்துகொண்டே வாருங்கள். ஒரு சீனுக்கும் இன்னொரு சீனுக்குமான தொடர்பைக்கூட இதில் குறித்து வைக்கலாம்.  திரைக்கதையை திருத்தி எழுதும்போது, 'நான் எங்கே இருக்கிறேன்' என்று நீங்களே குழம்பிப் போகும் வாய்ப்பு அதிகம். அப்போது இந்த சீன் போர்டு, உங்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும்.

இந்த சீன் போர்டு என்பது உங்கள் வேலையை எளிதாக்குவதற்கானது.எனவே இதன் ஃபார்மேட்டை மாற்றுவது, புதிதாக உங்கள் வசதிக்கேற்ப எதையாவது சேர்ப்பது என எதை வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். இது உங்களது பெர்சனல் சீன் போர்டு. சிட் ஃபீல்ட், ப்ளேக் ஸ்னிடர், ப்ளார் அலெஸ்ஸான்ரா போன்ற திரைக்கதை குருமார்கள் சொன்னதைக் கலந்துகட்டியும், என் வசதிக்காகவுமே இந்த சீன் போர்டு ஃபார்மேட்டை நான் உருவாக்கியிருக்கிறேன். எனவே இதை ஒரு அடிப்படையாக வைத்துக்கொண்டு, உங்கள் வசதிக்காக இதை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளுங்கள். ஒரே நோக்கம், இதைப் பார்த்தால் ஒரு சீகுவென்ஸ் உங்கள் மனதில் விஷுவலாக ஓட வேண்டும்; அவ்வளவே!

இப்போது இவற்றை ப்ரின்ட் செய்து, உங்கள் 'எழுதும் அறை' சுவர்களில் ஒட்டிக்கொள்ளுங்கள். எப்போதெல்லாம் உங்களுக்கு கற்பனை பீறிக்கொண்டு கிளம்புகிறதோ, எப்போதெல்லாம் நல்ல மனநிலையில் இருக்கிறீர்களோ, அப்போது இந்த சீன் போர்டை குறுகுறுவென உற்றுப்பாருங்கள். காட்சிகளை மனதில் ஓட்டுங்கள். ஒரு காட்சி முடிந்து, அடுத்த காட்சி இயல்பாக அதாவது ஒரு தொடர்ச்சியாக ஆரம்பிக்கிறதா என்று யோசியுங்கள்.

இந்த சீன் போர்டில் உள்ள வசதி என்னவென்றால், ஒரு நேரத்தில் ஒரு சீகுவென்ஸில் மட்டும் கவனம் செலுத்தலாம். சில நேரம் நமக்கு ஆக்ட்-3 மட்டும் சீன்ஸ் டெவலப் ஆகலாம். மற்றொரு நேரம், லவ் போர்சன் மட்டும் வேகமெடுக்கலாம். சிறுகுறிப்பாக அவற்றை பொர்டில் நோட் செய்து வைக்கவும். ஒரு சீகுவென்ஸில் நாம் யோசித்த ஒரு விஷயம், இன்னொரு சீகுவென்ஸில் டெவலப் ஆகும் சீனால் பாதிக்கப்படலாம். அப்போது இரண்டில் எது சிறந்ததோ, அதை வைத்துக்கொண்டு மற்றதை அதற்கேற்ப மாற்றுங்கள்.

எல்லா சீகுவென்ஸிலும் சரிசமமாக சீன்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பாலும் சீகுவென்ஸ்-2ல் குறைவான காட்சிகளே இருக்கும். உங்கள் கதைக்கு ஏற்ப, இதுவரை உருவாகியிருக்கும் காட்சிகளை சீன் பாக்ஸில் எழுதிக்கொள்ளுங்கள்.

இந்த போர்டில் உள்ள சீன் பாக்ஸ்கள் பற்றியும், அவற்றை எப்படி டெவலப் செய்வது என்பது பற்றியும் +/-, < > போன்ற சிம்பல்கள் பற்றியும் அடுத்த பகுதியில் பார்ப்போம்.

(தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.