Sunday, November 22, 2015

திரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 64

64. திரைக்கதை எழுதும் நேரம்
 
கதை, பீட் ஷீட், சீகுவென்ஸ், சீன் போர்டு என்று திரைக்கதை எழுதத் தேவையான அனைத்தையும் தயார் செய்துவிட்டீர்கள். இது திரைக்கதை எழுதும் நேரம். சென்ற பகுதியில் நாம் ஒரு சீனின் அம்சங்கள் என்னென்ன என்று பார்த்தோம். அதையே இப்போது பேப்பரில், திரைகதையாக எழுதப்போகிறோம். இங்கே ஒரு முக்கியக் குறிப்பு. தமிழ் சினிமாவில் திரைக்கதைக்கென்று பொதுவான ஃபார்மேட் இல்லை. நாடக வடிவம் போன்று சாதாரணமாக எழுதும் ஆட்களும் உண்டு. 

திரைக்கதை என்பது இயக்குநருக்கு முக்கியமான கையேடு. நீங்கள் தான் இயக்குநர், நீங்களே திரைக்கதை ஆசிரியர் என்றால் உங்கள் இஷ்டப்படி என்ன ஃபார்மேட்டில் வேண்டுமென்றாலும் எழுதிக்கொள்ளலாம். படத்தினை இயக்கப்போவது இன்னொருவர் என்றால், அது குழப்பத்தையே உண்டாக்கும். ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர் உள்ளிட்ட பலருக்கும் திரைக்கதை தான் அடிப்படை ரெஃபரன்ஸ். எனவே திரைக்கதை என்பது பொதுவான ஒரு ஃபார்மேட்டில் இருப்பது நல்லது.

 இப்போது ஹாலிவுட் திரைக்கதை வடிவம் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. அதையே இப்போது பார்க்கப்போகிறோம். சென்ற பகுதியில் துப்பாக்கி-பெண் பார்க்கும் படலத்தைப் பார்த்தோம். இப்போது அதற்கு அடுத்து ஹீரோ, ஹீரோயினை மீண்டும் சந்திக்கும் சீனை எடுத்துக்கொள்வோம்.

ஹீரோ தன் போலீஸ் நண்பனுடன் ஒரு பாக்ஸிங் நடக்கும் இடத்திற்குச் செல்கிறார். நேற்று பெண் பார்க்கப்போனது பற்றி நண்பன் கேட்க, ஹீரோ நடந்ததைச் சொல்கிறார். அதே நேரத்தில் அங்கே பாக்ஸிங்கில் கலந்துகொள்ள வந்திருப்பது, அடக்கமான பெண் என்று நினைத்து ஹீரோவால் ரிஜெக்ட் செய்யப்பட்ட ஹீரோயின். அதைப் பார்த்து ஹீரோவுக்கு ஆச்சரியம், ஹீரோயினுக்கு ஹீரோவை மீண்டும் பார்த்ததும் கடும் கோபம். அந்தக் கோபம், ஹீரோயினின் எதிராளியின் மேல் பாக்ஸிங் குத்தாக இறங்குகிறது.

இது தான் காட்சியின் சாராம்சம். இதற்கு சீன் எழுதுவது எப்படி என்பதற்கு, இந்தக் காட்சியை உதாரணமாக வைத்துக்கொள்வோம்.

SCENE HEADING:
ஒரு சீனின் முதல் அம்சம், SCENE HEADING எனப்படும் காட்சித் தலைப்பு தான். இதற்கு ஸ்லக் லைன் (SLUG LINE ) என்றொரு பெயரும் உண்டு.

ஒரு காட்சி நடைபெறும் இடத்தையும் நேரத்தையும் குறிப்பிடுவதே, சீன் ஹெடிங் ஆகும். எனவே, இடம் அல்லது நேரம்  மாறும்போது சீனின் நம்பரும் மாறும். ஒரு சீனின் முதல் வரியில், இடத்தையும் நேரத்தையும் சொல்லிவிட வேண்டும். அது தான் சீனிற்கு தலைப்பு. எனவே துப்பாக்கி சீனிற்கு Scene Heading இப்படி எழுதலாம்:

 SCENE 7: INT.BOXING AUDITORIUM - DAY

உங்களுக்கு தமிழில் எழுதவே விருப்பம் என்றால்..
 உட்புறம்.குத்துச்சண்டை மையம் - பகல்

ஒரு சீன், ஒரு இடத்தின் உள்ளேயும் நடக்கலாம். வெளியேயும் நடக்கலாம். எனவே அதையும் இங்கே தெளிவாகக் குறிப்பிடுகிறோம். இதில் INT(உட்புறம்) என்பது Interior-ஐக் குறிக்கும். வெளிப்புறத்தில் நடக்கும் சீனைக் குறிக்க EXT. ( அதாவது Exterior) என்பதைப் பயன்படுத்த வேண்டும்.

துப்பாக்கியில் மேலே பார்த்த காட்சிக்கு முந்தைய காட்சி ரோட்டில் வெளிப்புறம் நடப்பதால்,

 SCENE 6 : EXT.ROAD - DAY

 என்று அதற்கு காட்சித் தலைப்பு வரவேண்டும்.

 ஒரு காட்சி, ஆளரவற்ற ரோட்டில் இரவு ஒரு மணிக்கு நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஒரு மணி அல்லது நள்ளிரவு என்பது கதைக்கு மிகவும் முக்கியமானது என்றால், இங்கே குறிப்பிடப்பட வேண்டும். இல்லையென்றால், இரவு (அல்லது பகல்) என்று குறிப்பிட்டாலே போதும். 

 ஆக்சன் (Action Description ) :
காட்சித்தலைப்பில், இடத்தையும் நேரத்தையும் சொல்லியபின் அடுத்து வருவது, ஆக்சன். ஒரு சீனில் நடக்கும் சம்பவங்கள், கேரக்டர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் ஆக்சன் தான். முதலில் ஒரு காட்சி ஆரம்பிக்கும்போது, என்ன நிலைமை, என்ன நடக்கிறது என்று சொல்லும் எஷ்டாப்ளிஷ்மெண்ட் லைனாக ஆக்சன் வரும்.

துப்பாக்கி சீனிற்கு ஆரம்ப ஆக்சனை இப்படி எழுதலாம்:
கல்லூரி மாணவிகளால் அரங்கம் நிரம்பி வழிகிறது. ஹீரோ, தன் போலீஸ் நண்பனுடன் உள்ளே வருகிறான்.
(காட்சியின் ஆரம்பத்தை மட்டும் SCENE DESCRIPTION என்றும் அழைப்பதுண்டு.)

பிறகு ஒரு கேரக்டர் பேசுவதைக் குறிப்பிடுவோம். அந்த வசனத்திற்கு இன்னொரு கேரக்டரோ அல்லது அதே கேரக்டரோ, ஏதாவது எதிர்வினையாற்றும் அல்லவா? அதுவும் ஆக்சன் கேட்டகிரியில் தான் வரும்.
ஹீரோ, பாக்ஸிங் மேடையில் வந்து நிற்கும் பெண்ணைப் பார்த்து அதிர்ச்சியில் பேச்சை நிறுத்துகிறான். மேடையில் ஹீரோயின்.
-     
இதுவும் ஆக்சன் தான்.

 காட்சிப்படுத்தபடாமல், சத்தம் மட்டும் கேட்கிறதென்றால் அதுவும் ஆக்சனில் தான் சொல்லப்படும். உதாரணமாக,  

ஹீரோ பேசிக்கொண்டிருக்கும்போதே, ஒலிபெருக்கியில் அறிவிப்பு வருகிறது.

இடது மார்ஜின் முதல் வலது மார்ஜின் வரை, ஜஸ்டிஃபை செய்யப்பட்டு இந்த ஆக்சன் பகுதி டைப் செய்யப்பட வேண்டும்.

கண்டிப்பாக நிகழ்காலத்தில் நடப்பதாகவே காட்சிகளை எழுத வேண்டும். அதாவது, ’அவளைப் பார்த்தான்’ என்று எழுதாமல் ‘அவளைப் பார்க்கிறான்’ என்று எழுத வேண்டும். ஷீட்டிங்கின்போது விளக்குவதற்கும் நடிப்பதற்கும் நிகழ்காலமே பயன்படுத்தப்படுவதால், இந்த விதி.

  ஆக்சன் பகுதியை எழுதும்போது நாம் நினைவில் வைக்க வேண்டிய முதல் விஷயம், காட்சிப்படுத்தக்கூடிய விஷயங்களை மட்டும் தான் நீங்கள் எழுத வேண்டும். மனதிற்குள் ஓடும் சிந்தனையை ஒரு அளவிற்கு மேல் திரைக்கதையில் சொல்ல முடியாது.

அதாவது…

ஹீரோவுக்கு தன் காதலை ஹீரோயினிடம் சொல்ல ஆசை. ஆனால் அவள் தன் காதலை மறுத்துவிடுவாளோ என்று தயங்குகிறான். அவள் அண்ணன் வேறு பெரிய ரவுடி. அவனிடம் சொல்லிவிட்டால் என்னாவது என்று பயப்படுகிறான். ஆனாலும் வேறுவழியின்றி, காதல் கடிதத்துடன் அவளை நெருங்குகின்றான்.

- என்று எழுதுவது வீண்வேலை. ஹீரோவின் ஆசை என்ன என்பதை முந்தைய காட்சிகளே சொல்லியிருக்கும். அவளின் அண்ணன் யார் என்றும் முன்பே சொல்லியிருப்போம். எனவே இந்த விளக்கமெல்லாம் இங்கே அவசியம் இல்லை.

ஹீரோ தயக்கத்துடனும் பயத்துடனும் அவளை நெருங்குகிறான். காதல் கடிதத்தைப் பிடித்திருக்கும் அவன் கை நடுங்குகிறது.

முதல்வரியை மிட் ஷாட்டிலும், அடுத்த வரியை க்ளோசப்பிலும் காட்சிப்படுத்திவிட முடியும். எனவே சுருக்கமாக, நச்சென்று நடப்பதைச் சொல்லுங்கள். 

Character Name:
திரைக்கதையில் வசனம் மூன்று விஷயங்களின் மூலம் சொல்லப்படும். ஒன்று, பேசுபவரின் பெயர். இரண்டாவது வசனத்தை விளக்க உதவும் பிராக்கெட் பகுதி; மூன்றாவது, பேசப்படும் வசனம். எனவே, முதலில் பேசுபவர் பெயரை மட்டும் குறிப்பிடவேண்டும். வேர்டு அலைன்மெண்டில் கேரக்டர் பெயர் ‘செண்டர்’ செய்யப்பட வேண்டும்.
உதாரணம்,

சத்யன்

 Paranthesis
 பேசுபவரின் உணர்ச்சியைக் குறிப்பிட வேண்டுமென்றாலோ அல்லது யாரிடம் சொல்கிறார் என்று தெரியவேண்டும் என்றாலோ உதவுவது இந்த பிராக்கெட் பகுதி. ‘என்ன?’எனும் கேள்வியை கோபமாகவும் கேட்கலாம், வெட்கத்துடனும் கேட்கலாம். எனவே

ஹீரோ
(கோபத்துடன்)

அல்லது

ஹீரோ
(ஹீரோயினிடம்)

-என்று குறிப்பிட இது உதவும்.

வசனப்பகுதி (Dialogue):
கேரக்டர்கள் பேசும் வசனம், இந்தப் பகுதியில் எழுதப்படும். திரைக்கதையின் ஃபர்ஸ்ட் ட்ராஃப்ட் எழுதும்போது, என்ன வருகிறதோ அதை எழுதிக்கொள்ளுங்கள். இதை மெருகேற்றுவது பற்றி, தனியாகப் பார்ப்போம்.

எனவே துப்பாக்கி சீனில் சத்யன் பேசும் முதல் வசனத்தை இப்படி எழுதலாம்:
சத்யன்
(செக்யூரிட்டியிடம்)
செக்யூரிட்டி பக்கானா? ஐடி கார்டு நஹிக்கோ, அந்தர் மத் சோட்னா.

 சத்யனின் ஹிந்திக்கு மன்னிக்கவும்!

இவ்வாறு தொடர்ந்து ஒரு கேரக்டர் பேசுவதையும், அதன்பின் நடக்கும் ஆக்சனையும் எழுதுங்கள். நிறைவாக வருவது, டிரான்சிசன்.

Transition:
ஒரு சீனின் முடிவுரை இது. பொதுவாக ஒரு சீன் முடியும்போது கட் ஆகி, இன்னொரு இடத்தில் ஆரம்பிக்கும். இதை CUT TO: என்று எழுதிவந்தார்கள். இது தான் வழக்கமான நடைமுறை (Default) என்பதால், இப்போதெல்லாம் இதை யாரும் குறிப்பிடுவதில்லை. எனவே டிரான்சிசன் எழுதப்படவில்லையென்றால், அது கட் டூ என்று அர்த்தம் ஆகும்.

ஹீரோயின் முகத்தில் ஒரு சீன் முடிந்து, ஒரு பூவைக் காட்டியபடி அடுத்த சீன் ஆரம்பித்தால் அங்கே டிரான்சிசனைக் குறிப்பிடவேண்டும். ஷூட்டிங் குழுவிற்கு, ஒரு குறிப்பாக அது உதவும். கட் டூ தவிர்த்து வேறு என்னென்ன டிரான்சிசன் உண்டு என்பதைத் தனியே ஒரு பகுதியில் சொல்கிறேன்.

ஆங்கிலத்தில் எழுதும்போது, COURIER (NEW) எனும் எழுத்துருவை உபயோகிக்கிறார்கள். எழுத்தின் அளவு 12 பாயிண்ட். அதில் எழுதும்போது தான், ஒரு பக்கம் என்பது தோராயமாக திரையில் ஒரு நிமிடம் வரும் என்று கணித்து வைத்திருக்கிறார்கள். இதையே நீங்களும் பின்பற்றலாம். (நான் எழுத்து சைஸ் 9-ஐ உபயோகிக்கிறேன். நிமிடக்கணக்கு/பக்கக் கணக்கு பார்க்க மட்டும், 12க்கு மாற்றி பார்த்துக்கொள்வேன்.) 

இப்போது, துப்பாக்கி சீனின் ஆரம்ப, இறுதிப்பகுதிகள்:





(தொடரும்)




மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

  1. Celtex la tamila epadi nga type pani pdf ah tamil font layaee convert panuradoo. Naan panina box box ah varudoo converted file

    ReplyDelete
    Replies
    1. நான் செல்டெக்ஸ் உபயோகிப்பதில்லை. நீங்கள் கேட்ட சந்தேகத்திற்கு, ஜெய்லானியின் தொடர் பதிவில் பதில் இருந்ததாக ஞாபகம். தேடவும்.

      Delete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.